எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய சிந்தனையும், ஆற்றலும், தூய கரங்களும் கொண்ட இளையோர்களைக் கொண்ட தனது வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்யும் முயற்சிக்கு முழுமையான ஆதரவினை வழங்குமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மிகுந்த நிதி நெருக்கடியின் மத்தியில் அநாவசியமான செலவுகளைத் தவிர்த்து எதிர்வரும் தேர்தலை முற்றுமுழுதாக மக்களை நம்பி எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், சில அவசியமான செலவுகளை செய்வதற்கான நிதி உதவிகளை முடிந்தளவு செய்துதவுமாறு நிலத்திலும் புலத்திலும் உள்ள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காலாகாலமாக தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்திவரும் கட்சிகள் தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளை வென்றெடுப்பதில் தோல்வியைத் தழுவியுள்ளதாகவும் அதனால் தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுத்துச்செல்வதற்கு இளையோர்களைத் தயார்படுத்தி அவர்களின் கைகளில் அரசியலை ஒப்படைக்கும் தருணம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், அதன் காரணமாகவே நூற்றுக்கணக்கான இளையோர்களை எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் களம் இறக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் இளையோர்களை வெற்றிபெறச்செய்து தமிழ் அரசியலில் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவதற்கு தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவினை அளிக்க வேண்டும் என்றும் தமது பிரசார நடவடிக்கைகளுக்கு உதவும்வகையில் இயன்றளவு நிதி உதவிகளை அவர்களுக்கு வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் முதன்முறையாக இம்முறை தேர்தலில் களம் இறங்குவதாலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக தேர்தல் பிரசார செலவுகள் மிகவும் அதிகமாக இருப்பதால் புலம்பெயர் நாடுகளிலும் உள்நாட்டிலும் வாழும் நண்பர்கள், தனது மாணவர்கள், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தம்மால் இயன்றளவுக்கு நிதி உதவி செய்யவேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.