போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்விற்காக சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படும் இளைஞர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை திணைக்களத்தின் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் எதிர்வரும் வருடங்களுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் நீதியமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
போதைப் பொருட்களுக்கு அடிமையாகி புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 16 முதல் 22 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்கு தொழில்வாய்பிற்காக அனுப்பவும், அவர்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சி நெறிகளை தனியார் பல்கலைக்கழகங்கள் ஊடாக வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக புனர்வாழ்வு நிலையங்களில் உள்ள பயிற்சி பெற்ற 50 இளைஞர்களை இவ்வாறு வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளோம்.
மேலும், இச் செயல் திட்டத்தை முன்னெடுக்க தனியார் பிரிவினரின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் கைதிகளுடைய தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதுடன் ஊடாக அவர்களுடைய குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை உதவும்.அதேவேளை, முகாம்களில் தடுத்த வைக்கப்பட்டுள்ள மற்றைய கைதிகளின் தொழில்முறை திறன்களை மேம்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.