“ஜனாதிபதி ரணிலின் சூழ்ச்சியை வெளியே கொண்டுவருவதற்கு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதே சபைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் நேற்று நடைபெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“தேர்தல் நடக்குமா என மக்கள் தொடர்ந்து கேட்டுவருகின்றனர், ஆனால் ஜனாதிபதி ரணிலுக்கு தேர்தலைச் சந்திப்பதற்கு பயம், இதுவே தேர்தலை பிற்போடக் காரணம்.
நான் 2019 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கோரி தனிநபர் சட்டவரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தேன், ஆனால் மாகாண சபைத் தேர்தலையும் இவ்வாறான சூழ்ச்சியின் மூலம் பிற்போட்டு விட்டார்கள்.
இப்போது மாகாண அதிகாரமும் கிடையாது, உள்ளூராட்சி அதிகாரத்தையும் வழங்க மறுக்கிறார்கள். மக்கள் ஆணை இல்லாமல் ஜனாதிபதியாக வந்த ஒருவர் முழு அதிகாரத்தையும் தனது கையில் எடுத்து தேர்தலை பிற்போட செய்யும் சூழ்ச்சியை வெளியே கொண்டுவருவதற்கு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.
இந்த தேர்தலினால் ஏற்படப்போகும் விளைவுகளை உணர்ந்த காரணத்தினாலேயே குறித்த தேர்தலை பிற்போட முனைப்புக் காட்டுகின்றனர்.” இவ்வாறு நேற்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.