கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் அதை நினைவு படுத்திய போராட்டம் ஒன்று (20) இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சி கந்தசாமி கோயில் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து ஏழாவது ஆண்டு ஆண்டில் கால் பதிக்கின்றது.
இந்த நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஆறு வருடங்களை நினைவுபடுத்து முகமாக இன்றைய தினம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கந்தசாமி கோவில் முன்னிலையில் இருந்து கிளிநொச்சி டிப்போ சந்தி வரை ஏ9 வழியாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பெற்றோர் கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பிய வாறு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதிகோரி மக்கள் போராடுவதை தமிழ் தேசியம் பேசும் நாடாளுமன்ற தலைமைகள் தமது ஓட்டு வங்கியை நிரப்ப பயன்படுத்திக்கொண்டார்களே தவிர அதற்கான தீர்வுக்காக எந்த நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்வில்லை. தென்னிலங்கை அரசியல்தலைமைகளுடன் இணைந்து செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாமன் போன்றோர் இந்த மாதத்துக்குள் தீர்வு, அடுத்த மாதத்துக்குள் தீர்வு என இழுத்தடிப்பு செய்கிறார்களே தவிர அவர்கள் கூட தீர்வுகளை நோக்கிய நடவடிக்கைகள் எவற்றையும் முன்னெடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசு காலத்தில் இந்த காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்துக்கு தீர்வு தருவதாக கூறி போராடும் உறவுகளின் போராட்டத்தை தற்காலிகமாக நீர்த்துப்போக செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.