தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முனைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் 21 பேர் நிபந்தனைகளின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட 21 தமிழ் அரசியல் கைதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வடமாகாணத்திலும் கொழும்பிலும் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் மற்றும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
குறித்த 21 நபர்களும் 2014 ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு வவுனியா, கிளிநொச்சி, பூசா ஆகிய பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் சில மாதங்கள் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து அவர்கள் சிறைச்சாலையில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டதுடன், அவர்களது உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் நாடளாவிய ரீதியில் பல சாத்வீக போரட்டங்களை மேற்கொண்ட நிலையில், கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் குறித்த 21 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் 21 பேரையும் எந்த நிபந்தனைகளும் இன்றி அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.