“டிஜிட்டல் வாக்களிப்பு முறை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.” – இலங்கை டிஜிட்டல் பிரஜைகள் சங்கம்

வாக்கெடுப்பு நடத்தும் போது ஏற்படும் கணிசமான செலவைக் குறைத்தல் உட்பட பல்வேறு வழிகளில் நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில், விரைவில் டிஜிட்டல் வாக்களிப்பு முறை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை டிஜிட்டல் பிரஜைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தேர்தல் செலவு மற்றும் தேர்தல் பணியாளர்களின் தேவையை வெகுவாகக் குறைக்கும் என இலங்கை டிஜிட்டல் பிரஜைகள் சங்கத்தின் அழைப்பாளர் அமண்டா ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு முறையை டிஜிட்டல் மயமாக்குவதை ஒரு செலவாக கருதாமல் எதிர்கால முதலீடாக கருத வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகம் மற்றும் மக்களின் மேலாதிக்கத்தை மதிக்கும் பட்சத்தில் அரசியல் சாதக பாதகங்கள் பற்றி சிந்திக்காமல் டிஜிட்டல் வாக்குப்பதிவு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

“தேவையான திகதியில் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுகளை அச்சடித்து ஒப்படைக்க முடியாத காரணத்தினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்படும் என கூறப்படுகிறது. பிரிண்டிங் பில் கோடிக்கணக்கில் உள்ளது. நாம் ஏன் டிஜிட்டல் முறைக்கு செல்ல முடியாது? டிஜிட்டல் வாக்களிப்பு மூலம் போக்குவரத்து, ஊழியர்களுக்கு பணம் செலுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் செலவிடப்படும் கணிசமான தொகை மிச்சமாகும்,” என்றார்.

2048 ஆம் ஆண்டிற்குள் இந்த நாட்டை செழிப்பாக மாற்ற அரசாங்கம் எண்ணுகிறது. அதற்கு பொது சேவையை டிஜிட்டல் மயமாக்குவது அவசியம். அந்த வகையில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிரேஷ்ட குடிமக்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பணிபுரிபவர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு, கொவிட் -19 தொற்றுநோயின் போது இந்தியா 2021 இல் மொபைல் அடிப்படையிலான மின்-வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இது ஒரு முன்னோடி திட்டம் மற்றும் இது 95 சதவீதம் வெற்றி பெற்றது. அதே சமயம், 1989 முதல் வாக்குச் சாவடிகளில் கூட்ட நெரிசலைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவு முறையைப் பயன்படுத்துகிறது. இந்தியாவால் அதைச் செய்ய முடிந்தால், 22 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில் ஏன் அதைச் செய்ய முடியாது? எனவும் அவர் கேட்டுள்ளார்.

மின்னணு தபால் மூலம் வாக்களிக்கும் முறை, தொலைபேசி மூலம் வாக்களிக்கும் முறை அல்லது இணையவழி வாக்களிப்பு முறைக்கு செல்லுமாறு சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நகரங்களில் ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்குவதே எங்கள் முன்மொழிவு. மின்னணு வாக்குப்பதிவுக்கு இடமளிக்க தேவையான சட்டங்களை மாற்றவும். வாக்களிப்பது மட்டுமல்ல, அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கும் நேரம் வந்துவிட்டது” என்றும் அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *