தனது தந்தைக்கு ரகசியமாக சிறுநீரக தானம் செய்து உயிரை காப்பாற்றிய 25 வயது மகள் !

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண், தனது தந்தைக்கு ரகசியமாக சிறுநீரக தானம் செய்தார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உண்மையை அறிந்த தந்தை உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் சிந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் மிசோரி மாகாணம், கிர்க்வுட் நகரை சேர்ந்தவர் ஜான் (60). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது 2 சிறுநீரகங்களும் செயலிழந்தன. அதன்பிறகு அவர் தொடர்ச்சியாக டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். குடும்பத்தினர் சிறுநீரக தானம் வழங்குவதை ஜான் விரும்பவில்லை.

பல மாதங்கள் காத்திருப்புக்கு பிறகு யாரோ ஒரு பெண் அவருக்கு சிறுநீரக தானம் செய்ய முன்வந்திருப்பதாக ஜானிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை அவர் ஏற்றுக் கொண்டார். கடந்த 16-ம் திகதி அவருக்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

உடல்நலம் தேறிய பிறகு தனக்கு சிறுநீரகம் தானம் வழங்கிய பெண்ணை சந்திக்க அவர் விரும்பினார். இதன்படி சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் மருத்துவமனையில் ஜானை சந்தித்தார். சிறுநீரக தானம் வழங்கிய பெண்ணை பார்த்ததும் அவர் உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் சிந்தினார். அந்தப் பெண் அவரது ஒரே மகள் டெலாய்னி (25).

“கடவுளே, எனது மகளா எனக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கினாள்’’ என்று அவர் கண்ணீர் மல்க கூறினார். மகளை ஆரத் தழுவி உச்சி முகர்ந்து வாழ்த்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

இதுகுறித்து டெலாய்னி கூறியதாவது: எனது தந்தை அவதிப்படுவதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் சிறுநீரக தானம் செய்ய முன்வந்தபோது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்கே தெரியாமல் மருத்துவர்களை அணுகி சிறுநீரக தானத்துக்கு தயாரானேன். ஒரே வீட்டில் தந்தையுடன் வசித்தாலும், நான்தான் அவருக்கு சிறுநீரக தானம் வழங்குகிறேன் என்பதை கூறவில்லை. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு உண்மையை அறிந்ததும் அவரால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்வாறு டெலாய்னி கூறினார்.

ஜான் கூறும்போது, “எனது மகள் எனக்கு மறுபிறவி அளித்திருக்கிறாள். உயிருள்ளவரை அவளுக்காக வாழுவேன்’’ என்று தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *