“முட்டாள்களை கூட வைத்திருந்ததால் தான் கோட்டாபய வீழ்ந்தார். ரணிலும் அதையே செய்கிறார்.” – இரா.சாணக்கியன்

“முட்டாள்களை இராஜாங்க அமைச்சர்களாகவும் ஆலோசகர்களாகவும் வைத்திருந்தே கோட்டாபய பதவியில்லாமல் போகவேண்டிய சூழல் ஏற்பட்டது.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதன்போது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் வட்டாரங்கள் மேற்கொள்ளவேண்டிய பிரசார செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்;  மக்கள் தேர்தல் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். ஒரு தேர்தல் நடந்தால்தான் அது ஜனநாயக நாடு என்று ஏற்றுக்கொள்ளப்படும். அதன்மூலம் தான் எமது அபிலாசைகளை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் சொல்லக்கூடிய சூழல் ஏற்படும். உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விவாதிப்பதற்கு இரண்டு நாட்கள் பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.

அங்கு எமது கருத்துகளை பதிவுசெய்வதற்கு தயாராகவுள்ளோம். தேர்தலுக்காக மக்கள் வீதியிலிறங்கி போராடவும் தயாராகவுள்ளனர்.

ஜனாதிபதி அண்மையில் வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். அத்தியாசிய சேவையாக சிலவற்றை அறிவித்துள்ளார். கழிவு நீர்வெளியேற்றப்படும் கால்வாய், வோக்குகள் கூட இந்த வர்த்தமானியில் வந்துள்ளது. ஜனாதிபதி அவர்கள் ஓடி ஒழிப்பதற்காக இந்த வோக்குகளை அத்தியாவசிய சேவையாக அறித்துள்ளாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.

நாங்கள் கல்லடி பாலத்தில் கறுப்பு சுதந்திர தின போராட்டம் நடாத்திய பின்னர் இன்று பாலங்களும் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த தேர்தலை ஜனாதிபதி உடனடியாக நடாத்தவேண்டும்.அவ்வாறு நீங்கள் நடாத்தாவிட்டால் சர்வதேச ரீதியாக உங்களுக்கு பாரிய அழுத்தங்கள் வரும். நீங்கள் எதிர்பார்த்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்காமல்போகும்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவர்கள் இந்த சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் சிலவேளைகளில் தேவைப்படாது, சீனாவிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வர ஆரம்பித்துள்ளார்கள். அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் தேவைப்படாது என கூறுகின்றார்.

சர்வதேச நாணய நிதியத்தினை காட்டி காட்டி மக்களை ஏமாற்றுவதுடன் தேர்தலையும் பிற்போட்டு பொருளாதாரத்தினை நல்ல நிலைக்கு கொண்டுவரலாம் என்று ஜனாதிபதி கருதுகின்றாரானால் அவரை யாரோ ஏமாற்றுகின்றார்கள்.

கோட்டாபய ராஜபக்ஸ அவர்களையும் இவ்வாறான பொய்களை கூறியே ஏமாற்றினார்கள். கோட்டாபய ராஜபக்ஸ சேதன பசளை ஊடாக நாட்டின் வருமானம் அதிகரிக்கும் என்று கூறினார். ஏன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முட்டாள் ஒருவரும் மில்லியனர் பில்லியனர் உருவாகபோகின்றார்கள் என்று கூறியிருந்தார்.

அவ்வாறான முட்டாள்களான இராஜாங்க அமைச்சர்களையும் ஆலோசகர்களையும் வைத்திருந்துதான் கோத்தபாய அவர்கள் பதவியில்லாமல்போகும் சூழல் ஏற்பட்டது. அவ்வாறு ரணில் விக்ரமசிங்கவுக்கும் தேர்தல் நடாத்ததேவையில்லை, பொருளாதாரத்தை கட்டியெழுப்பலாம், சர்வதேச நாடுகளின் உதவி தேவையில்லையென்றால் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வரும்.

வித்தியாசம் என்னவென்றால் ரணில் விக்ரமசிங்க என்பவர் தனி நபர். கோட்டாபயவினை சுற்றி மொட்டு கட்சி என்ற ஒரு பாராளுமன்றமே சுற்றியிருந்தும் அவர் நாட்டைவிட்டு தப்பியோடவேண்டிய ஒரு சூழல்வந்தது. ஜனாதிபதி தனியொருவராகயிருப்பதன் காரணமாக அவர் அத்தியாவசிய சேவையாக அறிவித்த வோக்குக்குள்ளேயே ஒழிக்கவேண்டிய சூழல் ஏற்படும்.” எனவும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *