“சிறுவயது திருமணங்கள் சட்டரீதியான துஷ்பிரயோகம்” – சிறுவயது திருமணங்களுக்கு எதிராக கிளிநொச்சி லிட்டில் எய்ட் திறன் விருத்தி மைய மாணவர்கள் கவனயீர்ப்பு செயற்பாடு !

அண்மைய தரவுகளின் படி உலகத்திலேயே சிறுவயது திருமணங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளுக்குள் இலங்கை அமைந்துள்ள தென்னாசிய வலயம் முன்னணியிலுள்ளது. ஏனைய தென்னாசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் சிறுவயது திருமண வீதம் குறைவாக உள்ள போதும் 16-18 வயதுக்கு இடையில் திருமணம் செய்வோர் வீதம் 12 வீதமாகவும் , 16 வயதுக்கு கீழானோர் திருமணம் செய்து கொள்ளும் வீதம் 2 வீதமான காணப்படுவதாகவும் யுனிசெப் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இலங்கையில் இளவயது திருமணங்கள் அதிகமாக நிகழும் பகுதிகளில் வடக்கு மாகாணமும் முன்னிலையில் உள்ளது.

யுத்தம் ஏற்படுத்திய வடுக்களும் – அதனால் ஏற்பட்ட வறுமையும், பாடசாலை இடைவிலகல்களும்  அதன் நீட்சியாக ஏற்பட்டுள்ள சமூகப் பிறழ்வுகளும் ஏராளமானவை. இதன் இன்னுமொரு வடிவமே இளவயது திருமணங்களாகும்.

பாடசாலை கல்வியை தொடர வேண்டிய சிறுமிகள் பலர் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டு அவர்களுடைய எதிர்கால கனவுகள் முழுமையாக சிதைந்து பல சிறுமிகள் கல்வியை தொடர வேண்டிய காலத்தில் மகப்பேற்று வைத்தியசாலைகளை நாடும் அவலம் தமிழர் பகுதிகளில் அதிகரித்து வருகின்றது.

மேலும் சிறுவயது திருமணங்கள் மூலம் அரோக்கியமற்ற எதிர்கால தலைமுறை ஒன்று தோன்றுவதற்கான அபாயமும் காணப்படுவதுடன் – எச்.ஐ.வி பரவல், இளவயத  தம்பதியினரிடையே மன உளைச்சல் மற்றும் இளவயது விவாகரத்துக்கள் என்பனவும் அடுத்தடுத்து நமது சமூகங்களில் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

முக்கியமாக அண்மைய நாட்களில் தமிழர் நிறைந்து வாழும் பகுதிகளில் போதைப்பொருள் பாவனையும் – வாள்வெட்டு கலாச்சாரமும் அதிகரித்துள்ளது. இது ஒருபக்கம் இருக்க பாடசாலை மாணவிகள் பலர் தென்னிந்திய சினிமா மோகத்தாலும் – வறுமையின் நிமித்தமும் பாடசாலை கல்வியை இடைவிட்டு  மேற்குறிப்பிடப்பட்ட சமூக சீர்கேடுகளில் ஈடுபடுவோருடன் காதல் ஏற்பட்டு வாழ்க்கை பற்றிய அனுபவம் – புரிதல் ஏதுமற்ற வயதில் பாடசாலை கல்வியை கைவிட்டு திருமண வாழ்க்கை ஒன்றினுள் நுழைகின்றனர்.” என வடக்கில் சிறுவர் விவகாரம் தொடர்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரச  அதிகாரி ஒருவர் தேசம்நெட்இடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மகளிர் தினமான இன்று கிளிநொச்சி திருநகர் பகுதியில் இயங்கி வரும்  லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் சிறுவயது திருமணங்களுக்கு எதிராகவும் – அது தொடர்பான விழிப்புணர்வை பாடசாலை மாணவர்களிடையேயும் கிளிநொச்சி மக்களிடையேயும் ஏற்படுத்தும் நோக்குடன் கிளிநொச்சி நகரிலுள்ள கிளி. மத்திய மகாவித்தியாலயத்தின் முன்பாக அமைதிவழி கவனயீர்ப்பு செயற்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கவனயீர்ப்பு செயற்பாட்டு ஏற்பாட்டு குழுவினர் கருத்து தெரிவித்த போது ” சிறுவயது திருமணங்கள் பற்றி எங்கேயோ நடந்ததாக கேள்விப்பட்ட காலம் போய் நமது பக்கத்து வீடுகளில் கூட அடுத்தடுத்து நடைபெறும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் சிறுவயது திருமணங்கள் ஆக்கப்பூர்வமான சமூகத்தை அன்றி மன உளைச்சலுக்குள்ளான சமூகத்தை உருவாக்குகின்றது. 16 வயதுக்கு கீழான பிள்ளைகள் கூட திருமணம் செய்து கொள்ளும் அபத்தமான சூழல் நமது பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் 15வயதுக்கு கீழானோர் திருமணம் செய்யும் போது அது துஷ்பிரயோகமாக கருதப்பட்டு நீதிமன்றத்தீர்ப்புக்கு விடப்படுகின்ற போதும் 16-19 வயதுக்கு இடையான வயதுடைய பெண்கள் இந்த கட்டாய – விருப்பத்துடன் இளவயது திருமணங்களுக்குள் நுழையும் போது இலங்கையின் சட்டங்கள் அதற்கு எதிரான எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கான வரைபுகளை கொண்டிருப்பதாக தெரியவில்லை. இலங்கையில் 19 வயது அதாவது பாடசாலை கல்வி பூர்த்தியாகும் வரை மாணவர்கள் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்படுவதை தடுக்க இலங்கையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”  என வலியுத்தப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு செயற்பாட்டின் போது” சிறுவயது திருமணங்கள் சட்டரீதியான துஷ்பிரயோகம்”, “புத்தகப்பை சுமக்கும் வயதில் கருப்பை சுமப்பதா..?” “தாயோடு செல்லும் வயதில் பேரோடு செல்வதா” போன்ற வசனங்களை தாங்கிய பதாகைகளை பங்குபற்றியிருந்தவர்கள் தாங்கியிருந்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *