மது விற்பனையில் வேகமான சரிவு ஏற்பட்டுள்ளதால், 13 மதுபான உற்பத்தி நிறுவனங்கள் கலால் துறை மற்றும் நிதி அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் கலால் வரியை குறைக்க ஆவண செய்யுமாறு நிதி அமைச்சிடம் கலால் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது .
அக்கடிதத்தில் கலால் வரியை 2000 ரூபாவால் குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது. தற்போது மது, பியர் ஆகியவற்றுக்கு 4500 முதல் 5500 ரூபாய் வரை கலால் வரி விதிக்கப்படுகிறது.
தற்போது, மது விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளது, மேலும் சில மது உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுபானத்தின் விலை அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக மது விற்பனை பாரியளவில் குறைந்துள்ளதாக நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதுகுறித்து கலால் திணைக்கள கூடுதல் கலால் ஆணையர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளதாவது : மதுபான உற்பத்தியாளர்கள் போன்று கலால் திணைக்களமும் கலால் வரியை குறைக்க கோரியுள்ளது , மதுபானத்தின் விலை உயர்வால் , பலர் சட்டவிரோத மதுவை நாடியுள்ளனர். இந்த நிலையைக் கட்டுப்படுத்தும் வகையில் மதுவரியை இயன்றவரை குறைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கைகளின் படி மதுபான விற்பனை, சிகரட் விற்பனை போன்றவற்றால் அரசுக்கு கிடைக்கும் வருமானத்தை விட இவற்றை பாவிப்பவர்களுக்கான மருத்துவசெலவு எகிறியுள்ளதாக கடந்த ஆண்டு தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில்; மக்கள் மதுபானங்களை நுகரும் திறன் குறைந்துள்ளதாக அரசாங்க திணைக்களம் கவலை வெளியிட்டுள்ளது.