“அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் செயல்முறை பற்றி அறிந்திருக்கவேண்டும்.” – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

1978ம் அரசியலமைப்பின் 12.1 பிரிவின் கீழ் குறிப்பிட்டுள்ள படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் சட்டத்தினால் சமமான பாதுகாப்பு என்ற அரசியலமைப்பு உத்தரவாதத்தை கருத்தில் கொள்வதுடன் பொலிஸ் அதிகாரிகள் பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் அடையாளம் மற்றும் செயல்முறையை அங்கீகரிக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெவ்வேறு துறைகளில் உள்ள சகல பொலிஸ் உத்தியோகத்தர்களும் பால்நிலை மாற்றம் கொண்டவர்கள் மற்றும் பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் செயல்முறை பற்றி அறிந்திருக்கவேண்டுமென்பதுடன் யோக்யார்கட்டா கோட்பாடுகளில் பொதிந்துள்ள அவர்களின் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மதிக்கவேண்டும் எனவும் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாலின அடையாளத்தின் அடிப்படையில் பால்நிலை மாற்றம் கொண்டவர்களிற்கு எதிராக பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாரபட்சம் காட்டலாகாது என தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இதனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடைப்பிடிக்கவில்லை என்றால் அது அரசியலமைப்பின் 12.2 உறுப்புரையை மீறுவதாக அமையும் எனவும் தெரிவித்துள்ளது.

பாலின அடையாளத்தின் காரணமாக பால்நிலை மாற்றம் கொண்டவர்கள் உடல்ரீதியான தாக்குதல்கள் வாய்மொழி துஸ்பிரயோகம் மிரட்டல் மற்றும் அல்லது பிறவடிவங்களிலான வன்முறைகளை பொலிஸ் நிலையங்களில் சந்திக்கின்றனர் என இலங்கையின் மனித உரிமை  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பால்நிலை மாற்றம் கொண்டவர்களிடம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகித்தால் அது அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் அல்லது மனோரீதியாக சித்திரவதை செய்வதாக அல்லது இழிவாக நடத்துவதாக கருதப்படவேண்டும் என தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைக்குழு இது அரசமைப்பின் உறுப்புரை 11 மற்றும் அமுலில் உள்ள பிறசட்டங்களையும் மீறுவதாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் உடலை பரிசோதனை செய்யும்போது அவர்களின் பாலினத்தை அடையாளம் கண்டு அதன்படி செயற்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மனித உரிமை ஆணைக்குழு சந்தேகத்திற்கான நியாயமான காரணங்கள் இருந்தால் அந்த நபரை சோதனையிடுவதற்கு முன்னர் அவரது அடையாள அட்டையை அல்லது பிற செல்லுபடியாகும் ஆவணங்களை சரிபார்க்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

பால்நிலை மாற்றம் கொண்டவர்கள் பொது இடங்களில் களங்கம் பாகுபாடு மற்றும் வன்முறையை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைக்குழு அந்த நபர்களை மீறுபவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *