போதிய போசாக்கின்மையால் யாழ்ப்பாணத்தில் 50 நாட்களேயான கைக்குழந்தை உயிரிழப்பு !

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்ததன் விளைவாக மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து மக்கள் அவஸ்தை படுகின்ற அதே நேரம் போசாக்கின்மை என்கின்ற ஒரு பிரச்சனையும் இலங்கையில் அதிகரித்து வருகின்றது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளது. மேலும் முன்பு போல இலங்கையின் சுகாதாரத் துறையினால் தாய் – சேய் நலன்கள் தொடர்பான போசாக்கு உணவு வழங்கும் திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாத ஒரு சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இளைஞர்களிடையே குறிப்பாக பிறந்த கைக்குழந்தைகள் இடையேயும் –  கர்ப்பிணி தாய்மார்கள் இடையேயும் – சிறு வயது குழந்தைகளிடையேயும் மந்த போசனை பிரச்சனை அதிகரித்து வருகிறது.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண் குழந்தை மூச்சயர்ந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இம் மரணம் தொடர்பில் தும்பளை திடீர் மரண விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா விஞ்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

உடற்கூற்று பரிசோதனை 15 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற நிலையில், போதிய போசாக்கின்மை காரணமாக உயிரிழப்பு இடம்பெற்றதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *