கொழும்புத் துறைமுகத்துக்கு வரும் சகல கொள்கலன்களையும் தீவிர சோதனைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுங்கத் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில் கொள்கலன்களைச் சோதனையிடும் பணியில் கடற்படையினரையும் ஈடுபடுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறையினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி ஜனாதிபதி இதற்கான அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொடுத்ததாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய தெரிவித்தார்.
சுங்கத் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதுடன், பாதுகாப்பை வலுப்படுத்தவும், வினைத்திறன் மிக்க சேவையை வழங்கவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
கப்பல் இறக்குமதி தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு சுங்கத் திணைக்களம், துறைமுக அதிகார சபை, இலங்கை முதலீட்டு சபை ஆகியவற்றை இணைத்த வலையமைப்பொன்றை ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இதேவேளை சுங்கத் திணைக்களத்திற்குப் புறம்பாக வெளியில் கொள்கலன்களைச் சோதனையிடுவதற்கு பொதுவான ஓர் இடத்தை இனங்காணவும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.