ஆங்கில மொழியின் விசேட மற்றும் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு, அனைத்து தேசிய
பாடசாலைகளிலும் மார்ச் 30 முதல் தரம் ஒன்றிலிருந்து ‘ பேச்சு ஆங்கிலம்’ கற்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, 6-9 மற்றும் 10-13 வரையான அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும். இதற்கான முன்னோடித் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்றார்.
2030 ஆம் ஆண்டளவில் கல்வித்துறை தொடர்பான உலகளாவிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான சவாலை வெற்றிகொள்ள அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை பலராலும் விமர்சிக்கப்படும் ஒரு சூழல் உருவாக்கியுள்ளது.
தேசிய பாடசாலைகள் ஏற்கனவே அதிகப்படியான பௌதீக வளங்ளும் – ஆசிரிய வளங்களும் அதிகமாக கொண்டு காணப்படும் நிலையில் ஒப்பீட்டளவில் அடிப்படை கல்வி தொடங்கி பல விடயங்களில் பின்தங்கிய கிராமத்து பாடசாலைகளுக்கு கிடைக்கும் ஆசிரிய வளங்களும், பௌதீக வழங்களும் மிகச்சொற்பமானவையே. பெரும்பாலான தேசிய பாடசாலைகளில் இருந்து வெளியேறும் மாணவர்களுடன் ஒப்பிடும் போது கிராமப்பகுதிகளில் இருந்து வெளியேறும் பெரும்பாலான மாணவர்கள் அடிப்படை ஆங்கில அறிவு கூட இல்லாமலேயே வெளியேறும் துர்பாக்கிய நிலை இலங்கையில் காணப்படுகையில் கல்வி அமைச்சர் தேசிய பாடசாலைகளுக்கு மட்டுமே பேச்சு ஆங்கில பாடசாலையை வழங்கவுள்ளோம் என அறிவித்துள்ளமையானது பிற்போக்குத்தனமான கல்வி அமைப்பொன்று இங்கு காணப்படுவதையே உறுதிசெய்கிறது.
இலங்கையின் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வெள்ளை ஆடைகளை வழங்குவதன் நோக்கம் சமத்துவத்தை போதிப்பதேயாம் என கூறி பெருமைப்பட்டுக்கொள்ளும் இதே கல்வி அமைச்சு தான் இன்று தேசிய பாடசாலைகளுக்கு மட்டுமே பேச்சு ஆங்கிலத்தை கற்பிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த திட்டம் தொடர்பில் யாழ்ப்பாண கிராமப்பாடசாலை ஒன்றின் அதிபரிடம் வினவிய போது “முதற்கட்டமாக தேசிய பாடசாலைகளில் பேச்சு ஆங்கில திட்டத்தை நடைமுறைப்படுத்தி பின்பு அதன் வெற்றி தோல்விகளை நோக்கி சீரமைத்து பின்பு அனைத்து பாடசாலைகளிலும் பேச்சு ஆங்கில திட்டத்தை அறிமுகம் செய்ய கல்வி அமைச்சு திட்டமிட்டிருக்கலாம். இந்த தேசிய பாடசாலைகள் – தேசிய பாடசாலைகள் அல்லாத பாடசாலைகள் என பாடசாலைகளை வகை நிர்ணயம் செய்வதே மோசமான செயலாகத்தான் நான் பார்க்கிறேன். இது பாடசாலை மாணவர்களிடமும் – அவர்களின் பெற்றோரிடமும் தேசிய பாடசாலைகள் தரமானவை என்ற எண்ணம் வந்தமையே இன்றைய கிராமிய பள்ளிக்கூடங்களின் வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளது. இந்த நிலையின் ஒரு வடிவமே அண்மையில் யாழ்.நீர்வேலியில் மாணவர்கள் இல்லாததால் பாடசாலை ஒன்று இழுத்து மூடப்பட்ட சம்பவமாகும். இந்த கல்வி முறைமையே மாணவர்களிடம் நீ உயர்ந்த தேசிய பாடசாலையில் படிக்கிறாய் – நீ கீழான கிராம பாடசாலையில் படிக்கிறய் என்ற ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியுள்ளது.” எனக்கூறி விசனம் வெளியிட்டிருந்தார்.
ஒரு உடலின் வளர்ச்சி என்பது அனைத்து அங்கங்களும் சமனாக வளர்வதேயாகும். தனித்து ஒரு சில உடல் அங்கங்கள் மட்டும் அதிகப்படியாக வளருமாயின் அதனை நோய் நிலை என்போம். இலவசக்கல்வி அனைவருக்கும் சமனாக கிடைப்பதேயாம். தனித்து தேசிய பாடசாலைகளுக்கு மட்டுமே பேச்சு ஆங்கிலத்தை கற்பிப்போம் என்பதும் – அதனால் ஆங்கிலம் தெரிந்த சமுதாயம் ஒன்று உருவாகும் என கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதும் அந்த நோய் நிலைக்கு ஒப்பானதே !