சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) பெறப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) பற்றிய உண்மைகள் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட மாட்டாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.
இன்று (21) காலை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதும் அது தொடர்பான அனைத்து விடயங்களும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் உறுதியளித்துள்ளார். நேற்றிரவு (20) இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதிவசதி குறித்து கருத்து தெரிவித்த பந்துல குணவர்தன, உடன்படிக்கையின்படி, அடுத்த 48 மாதங்களுக்குள் யார் ஆட்சிக்கு வந்தாலும், சம்பந்தப்பட்ட அரசாங்கம் விதிமுறைகளின்படி செயல்பட வேண்டும் என்று விளக்கினார்.
அரசியல் கருத்துக்களால் சூழப்பட்டிருந்தாலும், திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நாங்கள் ஒப்புக்கொண்ட நிபந்தனைகளின்படி செயல்படாமல் இதற்கு முன் 16 முறை சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றிவிட்டோம் இம்முறையும் அது நடந்தால் நாடு மிகப் பெரிய பாதாளத்தில் விழும்.
எனவே, அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப செயல்படுவதற்கு மாறாக, வேலைத்திட்டத்திற்கு இணங்கிப் பணியாற்றுவதில் தேசிய ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது முக்கியம் என்று நான் நம்புகிறேன் என்றார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்துக்கு எதிரான அரசியல் கட்சிகள் இது தொடர்பான மாற்று ஆலோசனைகள் மற்றும் சாத்தியமான தீர்வுகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் அதன் பின்னர் விவாதம் அல்லது வாக்கெடுப்பு நடத்த முடியும் என்பதும் தனது தனிப்பட்ட கருத்து என்றும் அமைச்சர் கூறினார்.
இதே நேரம் “இலங்கை தசாப்த காலப்பகுதியில் அனுபவித்த மிக மோசமான நாணய நெருக்கடி காரணமாக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு இல்லாமலிருந்த அமைச்சர்களிற்கு தற்போது சர்வதேச நாணயநிதியத்தின கடனை தொடர்ந்து புதிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.” என ஜே.வி.பி கருத்து தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.