யாழ்ப்பாணம் அச்சுவேலியில் 15 வயது சிறுமியை மதுபானம் பருக்கி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ். அச்சுவேலியில் மதுபானம் பருக்கப்பட்டு சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார் என்று நேற்று முன் தினம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமியை பொலிஸார் மருத்துவமனையில் சேர்ப்பிக்கவில்லை. தாயாரை சேர்ப்பிக்குமாறு கூறியிருந்தனர். இந்த நிலையில் இரவு 8 மணி வரை சிறுமி மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்படவில்லை. இது தொடர்பாக அறிந்த மனித உரிமைகள் ஆணைக்குழு சிறுமியை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பிக்குமாறு அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்தே அவர் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து சட்ட மருத்துவ வல்லுநரின் பரிசோதனையில் சிறுமி போதையால் பாதிக்கப்பட்டமையும் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமையும் தெரிய வந்தது.
இதனிடையே அச்சுவேலி பொலிஸார் நடத்திய விசாரணையில் இந்தச் சம்பவம் தொடர்பில் 22, 31 வயதான இருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும் நேற்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இருவரையும் நீதிவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.