சமூக அடிக்கட்டுமானத்தின் மிக முக்கிய அளவீடு அச்சமூகத்தில் பெண்களின் நிலை. அதனால் தான் பெண்களுடைய கல்வி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் தமிழ் சமூகத்தில் பெண்களின் நிலை வரலாற்றுக்கு முந்திய காலத்திலும் சரி, கடந்து வந்த போராட்ட காலத்திலும் சரி அதற்குப் பிந்தைய காலத்திலும்; சரி இப்போதும் சரி கீழான நிலையிலேயே உள்ளது. உலகத்தில் 100 மில்லியன் பெண் குழந்தைகள் பதினெட்டு வயதுக்கு முன்னரேயே திருமணமாகின்றனர். இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டமே இளவயதுத் திருமணங்கள் கூடுதலாக இடம்பெறும் மாவட்டமாக உள்ளது.
பிபிசி செய்திகளின் படி கிழக்கு மாகாணத்தில் இளவயதுத் திருமணங்கள் 14 வீதத்தில் இருந்து 22 வீதமாக அதிகரித்துள்ளது. உலகில் இளவயதுத் திருமணங்கள் அதிகம் நடைபெறும் பகுதியாக தெற்காசியா காணப்படுகின்றது. இலங்கையில் இந்நிலை மோசமானதாக இல்லாவிட்டாலும் சில சமூகங்களில் இது பெரும் பிரச்சினையாகவே உள்ளது. இலங்கையில் திருமணவயது 18 ஆக இருந்த போதும் 12 வீதமானவர்கள் 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்கின்றனர். இவர்களில் இரண்டு வீதமானவர்கள் பதினைந்து வயதை எட்ட முன்பே திருமணம் செய்கின்றனர் என Protecting Environment andChildren Everywhere (PEaCE) அமைப்பு தெரிவிக்கின்றது. ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தாலென்ன கல்வி இன்றியமையாதது. ஆனால் ஒரு பெண்ணுக்குரிய கல்வி அச்சமூகத்தின் அடிக்கட்டுமானத்தைப் பலப்படுத்தி சமூகத்தின் நாட்டின் பொருளாதாரத்தை வளம்படுத்தி ஏற்றத்தாழ்வுகளை மிகக்குறைக்கும்.
பெண்களுடைய தலைமையில் நாடுகள் பொருளாதார முன்னேற்றத்தையும் சிறந்த நிர்வாகத்தையும் கொண்டிருந்தன. ஜேர்மனியில் ‘மம்’ என்று பிரியமுடன் அழைக்கப்பட்ட அஞ்சலா மேர்க்கல், நியூசிலாந்தில் ஜசின்டா ஆர்டன், பின்லாந்தில் சான மரின் போன்றவர்கள். சிறுமி கிரேற்ரா துன்பேர்க் சுற்றாடல் பாதுகாப்புக்காக குரல் எழுப்பி உலகத் தலைவர்களையே சற்றுத் திரும்பிப் பார்க்கச் செய்தார். ஆனால் இலங்கையில் இளவயது திருமணங்கள் அதிகமாக நிகழும் பகுதிகளில் வடக்கு மாகாணமும் முன்னிலையில் உள்ளது.
தேசம் திரை காணொளியில் மேலதிக விடயங்கள்