“தங்களது நாட்டினுடைய சக மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்த போது வீதிகளில் வெடி கொளுத்தி, பாற்சோறு காய்ச்சிய மக்களும், சர்வதேச நாணயநிதியத்தின் கடன் ஒப்புதலுக்கு பட்டாசு கொளுத்திய வித்தியாசமான மக்களும் இலங்கையில் மட்டுமே உள்ளனர்.”
இவ்வாறு, தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம், மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர்,
“சர்வதேச நாணயநிதியத்தின் கடன் ஒப்புதலை இலங்கைக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனக் கூறமுடியாது, எமது நாடு வங்குரோத்து நிலையில் உள்ளதை உறுதி செய்கின்ற விடயத்தையே இந்த கடன் ஒப்புதல் பிரதிபலிக்கிறது.
சர்வதேச நாணயநிதியத்தின் கடன் ஒப்புதலின் மூலம் இலங்கை மீண்டும் கடன் பெறுகின்ற நிலைக்கு மாறியுள்ளது, இது மேலும் கவலையளிக்கின்ற விடயமாகும்.
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைக்க, பாரிய முதலீடுகளை கொண்டு வருவதற்கு, தமிழருக்கு நிரந்தர தீர்வினை வழங்குமாறு கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை அரசிற்கு வலியுறுத்தி இருந்தோம்.
முதலீடுகளை கொண்டுவருவதற்கு எங்களுடன் இணைந்து செயல்படுங்கள் எனக் கூறினோம், இருப்பினும் இலங்கை அரசாங்கம் அதற்கு செவிசாய்ப்பதாக இல்லை.
கடனை வாங்கிக்கொண்டு மட்டும் நாட்டை முன்னேற்றலாம் என்பது முட்டாள்தனமான சிந்தனை.
தமிழர் தாயகங்களில் இலங்கை அரசு பெளத்த விகாரைகளை அமைத்து தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது.
தமிழ் மக்களுக்கு எதிரான, தமிழ் மக்களை புறக்கணிக்கின்ற செயல்பாடுகளை நாளாந்தம் இலங்கை அரசு செய்து கொண்டிருக்கின்றது.
இதேவேளை, தமிழ் மக்களின் நலன்கள் மற்றும் தமிழ் மக்களுக்காண தீர்வு விடயத்தில் அமைச்சர் அலி சப்ரியும் இரட்டை வேடத்தை போடுகின்றார்.
அவரின் விருப்பத்திற்கு அமைய சம்பந்தம் இல்லாத கருத்துக்களை வெளியிடுகின்றார்.
இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணயநிதியத்தின் கடன் ஒப்புதல் மட்டும் போதாது, தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வின் மூலமே அது சாத்தியமாகும்.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.