வட மாகாண ஆளுநர் நியதிச் சட்டங்களை இயற்றி வர்த்தமானியில் பிரசுரித்தமை தவறான செயற்பாடு என்று சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
இதனையடுத்து குறித்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு மேன்முறையீட்டு நீதிபதிகள் உத்தரவிட்டதோடு, குறித்த நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக எதிர்வரும் மே 24ஆம் திகதியன்று மீண்டும் இவ்விடயத்தினை மன்று கவனத்தில் கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தன்னிச்சையாக நியதிச் சட்டங்களை இயற்றி வர்த்தமானியில் பிரசுரித்த வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் நடவடிக்கைக்கு எதிராக வட மாகாண சபை இல்லாத காலத்தில் சட்ட வரம்பை மீறி ஆளுநர் தன்னிச்சையாக வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என்பதை வலியுறுத்தி வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தாக்கல் செய்த தடைகேள் ஆணை மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பந்துல கருணாரட்ன மற்றும் எம்.மரிக்கார் அமர்வின் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இதன்போது மனுதாரரான சீ.வீ.கே.சிவஞானம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி மற்றும் நிரான் அன்கிட்டல் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
அப்போது ஆளுநரின் நியதிச் சட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு தடைவிதித்தும், குறித்த சட்டவிதிகளை நடைமுறைப்படுத்தாமல் இருக்குமாறும் எழுத்தாணையை பிறப்பிக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து சட்டமா அதிபர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், ஆளுநரின் நியதிச்சட்ட வர்த்தமானி அறிவித்தல் தவறானது என்றும் அதனை செயற்பாட்டிலிருந்து நீக்குவதாகவும் மன்றுக்கு அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து குறித்த செயற்பாடு நடைமுறையில் இடம்பெறுவதை அவதானிப்பதற்காக மீண்டும் மே 24ஆம் திகதி மன்று குறித்த விடயத்தினை கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.