அண்மையில் நடக்கும் சம்பவங்களை தொகுத்துப் பார்த்தால், இந்த இருதுருவ அரசியல் மோதல் இந்திய நாடாளுமன்ற அதிகாரத்திற்கான போட்டி போலத் தோற்றமளித்தாலும், இதன் பின்னணியில் மாறிவரும் பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல் என்பது ஆழமான பங்கினை வகிப்பது போலுள்ளது.
மோடியின் நெருங்கிய சகாவாகக் கருதப்படும் அதானியின் மீதும், அவர் உருவாக்கிய அதானி குழும சாம்ராஜியத்தின் மீதும், மேற்குலக ஹின்டன்பேர்க் நிகழ்த்திய தாக்குதலும், கிடப்பில் போடப்பட்டிருந்த குஜராத் படுகொலை ஆவணங்களைத் தூசிதட்டி வெளியிட்ட மேற்குலகின் பழம்பெரும் பிபிசி ஊடகத்தின் நகர்வும், அடுத்து வரப்போகும் பூகோள அரசியலின் இராஜதந்திர மோதல்களுக்கு அடித்தளமிட்டது போல் தெரிகிறது. தற்போது கனடாவிலும் பிரித்தானியாவிலும் மீண்டும் கிளம்பியுள்ள சீக்கியர்களின் ‘காலிஸ்தான்’ முழக்கங்கள் இதனை மேலும் வலுப்படுத்துகிறது.
ரஷ்யா-உக்ரேயின் போரில், ரஷ்யா மீது கண்டனங்களைத் தெரிவிக்காமல் நழுவல் போக்கினை இந்தியா கடைப்பிடிப்பதாக மேற்குலகம் கருதுவதை, இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்ளும் பொதுவெளி ஊடக உரையாடல்களில் வெளிப்படும் கருத்து மோதல்கள் உணர்த்துகின்றன. “ஐரோப்பாவின் பிரச்சினை மட்டுமே உலகத்தின் பிரச்சினையல்ல” என்று ஜெயசங்கர் அவர்கள் கடும் தொனியில், ஊடகச் சந்திப்பொன்றில் கூறியது இம்மோதலை மேலும் உறுதிப்படுத்துகிறது.
ஆசிய-பசுபிக் பிராந்தியத்தை மையம் கொண்ட குவாட்(QUAD) இல் இந்தியா இருந்தாலும், ஆக்கஸ் (AUKUS) என்கிற உயர் தொழில்நுட்பக்கூட்டில் இந்தியாவும் இல்லை. ஜப்பானும் இல்லை. ஆனாலும் சீனாவிற்கு எதிரான QUAD அணியில் இந்தியாவின் வகிபாகத்தைப் பலப்படுத்த G7 இலுள்ள ஜப்பானைப் பயன்படுத்துகிறது அமெரிக்கா. அண்மையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட ஜப்பானிய அதிபர், நடைபெறும் போரில் உக்ரேனுக்கு ஆதரவான நிலைப்பாட்டினையும், தென்சீனக்கடலில் சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்குமாறு இந்தியாவை வலியுறுத்தினார். இதனை ஜப்பான் ஊடான அமெரிக்காவின் மென்போக்கு அணுகுமுறை என்று கணிப்பிடலாம். ஆகவே இந்தியாவை மையச்சுழல் புள்ளியாகக் கொண்ட, மேற்குலகின் புவிசார் அரசியல் நகர்வுகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டதனை இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன. இலங்கையிலும் மேற்குலகின் இராஜதந்திரிகள் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பதில் அக்கறை கொள்வதைக் காணலாம்.
அடுத்ததாக இந்திய அரசியலில் இதன் எதிர்வினைகள் என்னவென்று பார்க்கலாம். தமது பிராந்திய மூலோபாய நலனிற்குத் தேவையான நாடொன்று, நடுநிலையாகவோ அல்லது எதிரணியில் இருந்தாலோ, அந் நாட்டினை தம் பக்கம் இழுக்க பல நகர்வுகள் மேற்கொள்ளப்படும். அதில் ஆட்சிமாற்றமும் ஒன்று. இவைதவிர புதிதாக ஒரு பொருண்மிய அல்லது இராணுவக் கூட்டினை அமைத்து, அந்த ‘சிக்கலான’ நாட்டினை உள்வாங்கிக் கொள்வார்கள். இதில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட ஆட்சிமாற்றத்திட்டத்தில், ராகுல் காந்தியின் இந்திய காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கப்படுகிறது. அவரின் அண்மைக்கால புவிசார் அரசியல் கலந்த பேச்சுக்கள் மேற்குலக நிலைப்பாடுகளுக்கு இசைந்து போவதைக் காணலாம். இலண்டனில் நடைபெற்ற இந்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசிய ராகுல் காந்தி, ‘ இந்தியா மீதான சீனாவின் பாரிய அச்சுறுத்தலை வெளிநாட்டமைச்சர் புரிந்துகொள்ளவில்லை’ என்கிறார். ஆகவே மேற்குலகின் புவிசார் அரசியலோடு இணைந்து, ஹின்டன்பேர்க் அம்பாக மாற, ராகுல் காந்தி வில்லாக மாறி அதானியையும், ‘ஹவாலா’ மோடிகளையும் விமர்சிக்கும் ஒரு இந்தியத் தலைவராக தன்னை இனங்காட்டிக் கொள்ள முனைகிறாரா? என்கிற கேள்வி எழுவதில் ஆச்சரியமில்லை. இதற்கு அவசர அவசரமாக எதிர்வினையாற்றிய மோடி அரசு, ஹவாலா மோடிகளோடு நரேந்திர மோடியை சரிநிகர் பிம்பமாக சித்தரித்துப் பேசிய ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்து அவரை முடக்கிவிட்டது.
ஆகவே இந்திய நாட்டின் எதிர்க்கட்சியின் நிலை பலவீனமாக இருப்பதால், அரசின் புவிசார் நிலைப்பாட்டில் மாற்றங்களை நிகழ்த்துவது கடினமானதாகவிருக்கும் என்பதே நிதர்சனமாகும். 18 நாடுகள் இந்திய ரூபாவில் வர்த்தகம் செய்ய உடன்பட்டிருப்பதும், BRICS இன் விரிவாக்கமும் அதன் பொது நாணய உருவாக்க முன்னெடுப்பும், உலக எண்ணெய்ச்சந்தையில் ஏற்படும் மாற்றமும், அமெரிக்க- ஐரோப்பிய வங்கிகளின் நிதி மூலதன வெளியேற்றங்களும் சேர்ந்து உலக நிதிக்கட்டமைப்பில் பெருமாற்றங்களை நிகழ்த்தக்கூடிய வாய்ப்புக்களை காண்பிக்கிறது. இதில் இந்தியாவின் பூகோள அரசியல் நிலைப்பாடு குறித்தே மேற்குலகமும் ஜப்பானும் அதிக கரிசனை கொள்கிறது. ஆனாலும் இந்தியா மீதான மேற்கின் மறைமுக அழுத்தங்கள் அதிகரிக்கும் போக்குகளே அதிகமாகும் என்று தெரிகிறது.
இதயச்சந்திரன் (25-03-2023)