சட்டமாக்கப்படவுள்ள சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் ஒப்பந்தத்தின் முக்கிய விடயங்கள் சட்டமாக கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் ஆகிய மூன்று வரைவுகளும் ஜூன் மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (02) நடைபெற்ற சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டம் தொடர்பில் பல்கலைக்கழகங்களின் பொருளாதாரப் பிரிவு விரிவுரையாளர்களை தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் கருத்துக்களைப் பெறுவதற்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் பொருளாதாரப் பிரிவின் சிறந்த மாணவர்கள் பத்து பேரை அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அறிவித்தார். இதில், தெரிவு செய்யப்படும் சில மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நாட்டில் உற்பத்தி மற்றும் சேவைகள் தானியங்கி முறைமைக்கு செல்ல வேண்டும் எனவும் இல்லையெனில் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் போட்டியிட முடியாது எனவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதற்காக கல்வி முறையை புதிதாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 18 ஆவது தடவையாக சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதற்கு தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

முதலில் ஐ.எம்.எப் உடன்படிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா..? இல்லையா..? என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்க்கிறோம். அனைவரும் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏதேனும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். எனவே, ஆதரவு வழங்க கோரும் பிரேரணையை முன்வைக்க இருக்கிறோம்.

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின் முக்கிய அம்சங்களை சட்டமாக கொண்டு வர உள்ளோம். அதில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டுமானால் பாராளுமன்றம் செல்ல வேண்டும். அதிலுள்ள அடிப்படை விடயங்கள் மே மாதத்தில் சமர்ப்பிக்கப்படும். புதுவருடத்தின் பிறகு ஜஎம்எப் குறித்து கிராம மக்கள் அறிவூட்டப்படுவர். இரண்டாவதாக, பசுமைப் பொருளாதாரம் உட்பட நமது திட்டங்கள் என்ன? என்பது குறித்து தெளிவுபடுத்தப்படும்.முதலில் இந்தத் திட்டங்கள் தொடர்பிலான கருத்துக்களை பெற வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஊழல் ஒழிப்புச் சட்டமூலம் ஆகிய மூன்று வரைவுகளும் எதிர்காலத்தில் கொண்டுவரப்பட வேண்டும்.. இந்த மூன்று சட்டமூலங்களையும் ஒன்றாக கொண்டு வரக்கூடாது என நீதி அமைச்சர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோர் கோரிக்கை விடுக்கின்றனர். அதற்குக் காரணம், உச்சநீதி மன்றம் அவர்கள் மீதும் வேறு பல காரணங்களுக்காகவும் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கிறது. எனவே, ஏப்ரல் இறுதிக்குள் ஒரு வரைவை முன்வைக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அதன் பிறகு, மற்ற இரண்டு வரைவுகள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் ஜூன் மாதத்திற்குள் மூன்று வரைவுகளும் கொண்டு வரப்படும்.

குறிப்பாக நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், போட்டித்தன்மையுடன் உற்பத்தியை அதிகரிப்பதே எங்கள் நோக்கம். போட்டித்திறன் மற்றும் உற்பத்தி ஆகிய இரு துறைகளும் முன்னேற்ற வேண்டும். அதற்காக நாம் இணைந்து பணியாற்றலாம். அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களை இணைத்து தனி விவசாய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை உருவாக்கத் திட்டமிட்டோம். தேவைப்பட்டால், பட்டப் படிப்புகளை நிறுவலாம். இதன் ஊடாக ஆராய்ச்சி செயல்முறையை வலுப்படுத்த எதிர்பார்க்கிறோம். இதிலிருந்து தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இதிலிருந்து அறியலாம். அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்துவோம்.

ஐஎம்எப் ஒப்பந்தத்தை அனைவரும் படித்திருக்கிறார்கள். இங்குள்ளவர்களுக்கு அதைப் பற்றி தெளிவுபடுத்த முடியும். நாம் வழங்கக்கூடிய எந்தவொரு தீர்வையும் ஜஎம்எப் கட்டமைப்பிற்குட்பட்டு மட்டுமே வழங்க முடியும். அதிலிருந்து வெளியில் வர முடியாது. எங்களுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த கட்டமைப்பிற்குள் மட்டுமே நாம் செயல்பட வேண்டும்.

விவசாயிகளும், சுற்றுலாதுறை வர்த்தகர்கள் கூட இது அவசியம் என்கின்றனர். பெரும்பான்மையினரின் கருத்தும் அதுவாகும். தனியார் மயமாக்க வேண்டாம் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. அவ்வாறானால் என்ன செய்யுமாறு கேட்கிறார்கள்? அவற்றுக்காக செலவிடப்படும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கை பல்கலைக்கழகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் வழங்கினால் இதனை விட முன்னேற்றம் ஏற்படும்.அத்தோடு சம்பள பிரச்சினையும் தீர்க்கப்படும். தொழிற்சங்கங்கள் விரும்பியபடி செயல்பட முடியாது. இலங்கை மீண்டும் ஆப்கானிஸ்தானை விட பின்தங்குவதை அனுமதிக்க முடியாது.மறுசீரமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். நாட்டில் மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்பட ட வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளன.

தொழிற்சாலைகளை உருவாக்க சட்டமொன்றை கொண்டு வந்துள்ளதோடு ஆணைக்குழுவொன்றையும் உருவாக்கியுள்ளோம். ஆனால் நாம் தொழில்மயமாக்கலை முன்னெடுக்கவில்லை. யுத்தத்திலிருந்து சமாதானத்தை ஏற்படுத்த விரும்பினோம்.

1983-1987 களில் யுத்தத்திற்கு செலவழித்த பணத்தை விட அதிக பணம் சிவில் யுத்தத்திற்காக செலவழிக்கப்பட்டது. போருக்குப் பிறகு, நாங்கள் தொழில்மயமாக்கலுக்கு திரும்பவில்லை. மாறாக, நிர்மாணத் துறையில் உள்ள திட்டங்களுக்குச் சென்றுள்ளோம். 2009ல் கைத்தொழில்மயமாக்கலுக்கு சென்றிருந்தால் நிறைய முதலீடுகள் வந்திருக்கும். நிபந்தனைகள் விதித்தால், அந்த முதலீடுகள் வராது. நிலைமை நன்றாக இருந்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலில் வரமாட்டார்கள். வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பணத்தை வைத்திருந்த நமது முதலீட்டாளர்கள் தான் முதலில் வருவார்கள். அதன் பிறகு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவார்கள்.

30 வருடங்களில் நிறைவு செய்யப்பட வேண்டிய மகாவலி திட்டத்தை 10 வருடங்களில் நிறைவேற்ற ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நடவடிக்கை எடுத்தார். அதற்குப் பயன்படுத்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் ஒரே நேரத்தில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன. அதன் ஊடாக இலங்கை மக்களுக்கான பணத்தைப் பெறும் முறைகள் அமைக்கப்பட்டன. அவ்வாறு முன்னேறிய குழுக்கள் உள்ளன. அவர்கள் இப்போது வேறு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்.

நமக்கு இந்தப் பணிகளை அவ்வாறானதொரு நிலையிலேயே ஆரம்பிக்க வேண்டியுள்ளது. எமது மக்கள் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து தமது தொழில்கள் வீழ்ச்சியடையும் என அஞ்சுகின்றனர். எனவே, பணம் லண்டன் அல்லது டுபாயில் வைக்கப்படுகிறது. அந்த பணத்தை திரும்ப கொண்டு வர முடிந்தால்,சிறந்தது.

பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டில் பொருளாதாரம் கற்கும் மாணவர்களிடமிருந்து திறமையான பத்து மாணவர்களை தெரிவு செய்து வழங்க முடியுமா என அதிகாரிகளுடனும் அமைச்சருடனும் கலந்துரையாடுங்கள். நான்கு திறமையான மாணவர்களுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில்களை வழங்க எதிர்பார்க்கிறோம். ஹார்வர்ட், கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் மற்றும் ஸ்டாபோர்ட் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்வோம். என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *