வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பிரபல பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியரால் மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் முறையிட்ட மாணவியொருவர் பாடசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயர்தர வகுப்பில் வர்த்தக பிரிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே மாணவிகளிற்கு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பாதிக்கப்பட்ட மாணவியொருவர் பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து, மாணவியை வேறு பாடசாலைக்கு மாற்றுவதென்றால் மாற்றுங்கள் என பெற்றோரிடம், அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து மாணவி, வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பிறிதொரு பாடசாலையில் இணைந்துள்ளார்.
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துவரும் நிலையில் பாடசாலை நிர்வாகம் பாடசாலைகள் பாதுகாப்பானவை என்ற எண்ணத்தை பெற்றோருக்கும் – பிள்ளைகளுக்கும் ஏற்படுத்த வேண்டியது அத்தியாவசியமானது. ஆனால் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய பாடசாலை அதிபரே பாடசாலையை விட்டு விலகும்படியாக மாணவியிடம் தெரிவித்திருப்பது அபத்தமானது.
இது தொடர்பில் வலிகாமம் கல்வி வலயம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
கடந்த வருடம் இதுபோல முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள பிரதானமான பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் உயர்தர ஆண் மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தி அதன் மூலமாக பாடசாலையின் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை வீடியோக்களாக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளுக்கும் – இதனைக் கண்டு கொள்ளாது இருக்கும் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகளுக்கும் எதிராக உறுதியான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் கல்வி கற்ற சமூகம் எடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.
இதனைக் கண்டுகொள்ளாது கடந்து செல்வோமாயின் பாடசாலை கல்வியை தொடரும் முன் வரும் பல மாணவிகளின் எதிர்காலமே கேள்விக்கு உள்ளாகும் துப்பாக்கிய நிலை ஏற்படலாம் என பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.