பெருந்தோட்டங்கள் சம்பந்தமான தீர்மானங்களை மேற்கொள்கின்ற போது, அங்கு நிரந்தரமாக வாழும் தோட்டத் தொழிலாள சமூகத்தையும் கருத்திற்கொள்ள வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது,
இலங்கையிலுள்ள பெருந்தோட்டங்கள் சம்பந்தமாகவும் பெருந்தோட்ட கம்பனிகள் சம்பந்தமாகவும் பரிசீலிக்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் முடிவுகள் அத்தோட்டத்தையே நம்பி வாழும் பல தலைமுறையைச் சேர்ந்த நிரந்தர தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார நிலை, சமூக சேவைகள் மற்றும் நிரந்தர குடியுரிமை எதையுமே கருத்திற்கொள்ளாது வெறுமனே கம்பனிகளின் காணிகளை அளவிட்டு அவற்றை சிறு தேயிலை தோட்டக்காரருக்கு பகிர்ந்தளிக்கலாம் என பரிந்துரை செய்திருப்பது மிகவும் வேதனையும் வருத்தமுமளிப்பதாகவும் உள்ளது.
அமைச்சரவை உப குழுவின் கருத்துகள் முழுமையாக கிராம மக்களின் நலனுக்காகவே அமைகின்றது. 170 ஆண்டு காலமாக தோட்டங்களில் வாழும் தோட்ட தொழிலாளர்களின் நலன் பற்றி அவ்வறிக்கையில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. எனவே, உப குழுவின் பரிந்துரை எவ்வாறு இருந்தாலும், ஜனாதிபதி தோட்ட மக்களின் நலன்கள் பாதிக்காத வண்ணம் செயற்படுவார் என்ற நம்புக்கை உண்டு.
சிறு தோட்ட விவசாயிகளை ஊக்குவித்தல் என்ற அடிப்படையில் தோட்டக் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் போது அங்கு நீண்ட தலைமுறையாக வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களையும் தோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். அவர்களின் பொருளாதாரம் முன்னேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.