யாழ்ப்பாணம், அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நீக்க கோரி பெண்கள் அமைப்பு கவனயீர்ப்பு போராட்டம்!

இலங்கையில் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை  வேண்டாம் என்று கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு என்ற அமைப்பு இன்று(20) வியாழக்கிழமை மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியது.

அம்பாறை மாவட்டம்  மத்திய முகாமில் உள்ள நான்காம் கிராமம் பாமடி என்ற பிரதேசத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்றது .

அதன் போது அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இந்த கூட்டு முன்னணியின் சுமார் 300 பெண்கள் மும்மொழிகளிலுமான சுலோகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இறுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம் என்ற தலைப்பிலான மகஜரை பகிரங்கமாக வாசித்து கோஷம் எழுப்பி போராட்டத்தை நிறைவு செய்தனர்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம் எனவும், கருத்து சுதந்திரம் பறிபோகும் என்றும், இது முற்றுமுழுதாக வேண்டாம் என்பதையும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை யாழ்ப்பாணத்திலும் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிரான கவனயீர்பு போராட்டம்  யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம்(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது “மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்”, “பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் தாங்கியவாறு அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *