இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றைத் தயாரிப்பதில் அரசியல் கட்சிகளுக்கிடையே இதுவரை இணக்கம் காணப்படாத முக்கிய விடயங்கள் சிலவற்றுக்கு இவ்வாரம் நடைபெற்ற சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் உடன்பாடு காணப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
எஞ்சிய விடயங்களுக்கு அடுத்தவார கூட்டத்தில் இணக்கப்பாடொன்றை எட்டிவிடலாமென நம்புவதாகவும் பேராசிரியர் விதாரண தெரிவித்தார். அரசியல் தீர்வு யோசனையொன்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஏற்கனவே 95% விடயங்கள் தொடர்பில் பொது இணக்கப்பாட்டைக் கண்டுள்ளது.
இதில் ஏனைய விடயங்களிலும் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக வாரா வாரம் கூடி கலந்துரையாடி வருகின்றது. அந்த வகையில் இவ்வாரம் நடைபெற்ற கூட்டத்தில் மேலும் சில விடயங்களுக்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
மீதமாகவுள்ள விடயங்களுக்கும் பொது இணக்கம் ஏற்பட்டதும் ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அதன் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளதாக பேராசிரியர் விதாரண தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அந்தக் கட்சிகளினதும் கருத்துகளையும் ஆலோசனைகளையும் உள்ளடக்கி தீர்வுத் திட்ட வரைவொன்றைத் தயாரித்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.