தமிழ்நாடு மற்றும் கேரள கடலோரம் வழியாக விடுதலைப் புலிகள் ஊடுருவல் தொடர்பாக குறிப்பான அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றும், அதே நேரத்தில் ஊடுருவலுக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
நாடு முழுவதும் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களின்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் எச்சரித்தார்
அதே நேரத்தில், அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான பாதுகாப்புப் படைகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பீதியடையத் தேவையில்லை என்றும் சிதம்பரம் தெரிவித்தார். கடந்த இரண்டு வாரங்களில் பல ஊடுருவல்களை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளதாகவும், எல்லா உளவுத் தகவல்கள் மீதும் திவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.