நாட்டை விட்டு வெளியேறும் தாதியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக 2022ஆம் ஆண்டு ஜனவரிக்கும், 2023ஆம் ஆண்டு ஜனவரிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சுமார் எழுநூறு தாதிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவர்களில் ஐந்நூற்று ஐம்பது தாதியர்கள் சுகாதார அமைச்சின் அங்கீகாரத்துடன் விடுமுறை எடுத்து ஐந்து வருட காலத்திற்கு மேலதிக கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.
அத்துடன், தற்போதைய தரவு அறிக்கைகளின்படி சுமார் நூற்றைம்பது தாதியர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இதேவேளை, தாதியர் சேவையில் தற்போது சுமார் இரண்டாயிரத்து நானூறு வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இந்த வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் (தாதியர் கட்டுப்பாடு) சாமிக்க கமகே தெரிவித்துள்ளார்.
இதே நேரம் பொருளாதார நெருக்கடியினை அடுத்து சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.