வவுனியா விலுள்ள நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோரின் நலன் கருதி இன்று முதல் தொலைபேசி வசதிகள் ஏற்பாடு செய்துகொடுக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து வந்த பொதுமக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிவாரண உதவிகள் மற்றும் வசதிகள் தொடர்பாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்பின் பேரில் மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் தபால், தொலைத் தொடர்புகள் ஆகிய அமைச்சுக்கள் இணைந்து இத்தொலைபேசி இணைப்பு வசதிகளை செய்துகொடுக்கவுள்ளன.
நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் இந்த தொலைபேசியைப் பயன்படுத்தி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தங்களது உறவினர்களுடன் தொடர்புகொள்ள வசதிகள் செய்துகொடுக்கப்படவுள்ளன. ஒவ்வொரு நிவாரண நிலையங்களுக்கும் 2 தொலைபேசிகள் என்ற அடிப்படையில் வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள 15 நிவாரண நிலையங்களுக்கும் இன்று முதல் இத்தொலைபேசி இணைப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.