இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்கா இருந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மறுத்துள்ளார்.
‘ஒன்பது – மறைக்கப்பட்ட கதை’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ‘அரகலய’ ஆர்ப்பாட்டத்தின் பின்னணியுடன் அமெரிக்க தூதுவரை தொடர்புபடுத்தி அவரை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்துள்ள டுவிட்டர் பதிவிலேயே இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது மறுப்பினை தெரிவித்துள்ளார்.
அவரது டுவிட்டர் பதிவில், ‘புனைகதை’ என்று முத்திரை குத்தப்பட வேண்டிய புத்தகத்தில் ஒரு எம்.பி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி அப்பட்டமான பொய்களை பரப்பியிருக்கின்றார்.
75 ஆண்டுகளாக அமெரிக்காவும் இலங்கையும் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் செழிப்புக்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்டிருக்கின்றன.
அதேபோன்று தொடர்ந்தும் கூட்டாண்மையுடன் எதிர்காலத்தை நாம் உருவாக்குவோம். எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஜனாதிபதி மாளிக்கைக்குள் படைத்தளபதிகள் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டோர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவிருந்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் இராணுவத்தளபதி இந்தியாவுக்கு சென்றிருந்தமை சந்தேகத்தை தோற்றுவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்தை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
‘கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் பக்க நிகழ்வாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 7ஆம் திகதி இந்தியாவில் இடம்பெற்றது.
நாட்டின் அப்போதைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை மற்றும் அனுமதியின் கீழ் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு பதவி நிலை தலைமை அதிகாரி, முன்னாள் விமானப்படைத் தளபதி சவேந்திர சில்வா குறித்த மாநாட்டில் பங்குபற்றியிருந்தார்.
இந்நிலையில் நூல் வெளியீட்டு விழாவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய விமல் வீரவன்ச, ‘2022 மே 9ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் ஜனாதிபதி மற்றும் படைத்தளபதிகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் சவேந்திர சில்வா இந்தியா சென்றிருந்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியது.’ என குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து அடிப்படையற்றதாகும். சவேந்திர சில்வா கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்குபற்றுவதற்காக கடந்த ஆண்டு ஜூலை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தது அப்போதைய ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.