நாட்டு மக்களின் ஜீவனோபாயம் வீழ்ச்சியடைந்து கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு வருவதாக ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரங்க பண்டார நேற்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் 270 மீனவ படகுகள் கடலுக்குச் செல்ல கடற்படையினர் தடை விதித்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திரங்களும் அபகரிக்கப்பட்டுள்ளன. இதனால் 8,800 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களது ஒரே ஜீவனோபாய தொழில் இது மட்டுமே. கற்பிட்டிக் கடற்பரப்பில் ஆழ்கடல் சுழியோடிகள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அந்நிய செலாவணியை ஈட்டித் தருவது. இந்தத் தடையுத்தரவால் அந்நிய செலாவணியும் கிடைக்காமல் போகிறதல்லவா?
மீன்பிடிக்கச் செல்வதற்குக் கடல் எல்லை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சிறு தீவுகள் காணப்படும் கடற்பகுதியிலேயே மீன் பிடிக்க முடிகிறது. தமிழ்-சிங்கள சித்திரை புது வருடத்துக்கு சில நாட்களே உள்ளன. இந்த உற்சவ காலத்தில் மக்களின் நிலை பற்றி எவருமே கருத்தில் கொள்வதாகத் தெரியவில்லை.
அரசு புதுமாத்தளன் பகுதியில் 1 கிலோ மீற்றருக்கு புலிகளை மட்டுப்படுத்தி உள்ளதாகக் கூறுகிறது. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகள் அரச கட்டுப்பாட்டில் உள்ளதாக இராணுவ பேச்சாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் எல்லோரும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் கற்பிட்டி கடற்பரப்பில் மீன் பிடிக்க அரசு கடற்தொழிலாளர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கின்றது என நான் அரசிடம் கேட்கிறேன் . மீனவர்கள் தமது ஜீவனோபாய தொழிலை மேற்கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என்றே நான் அரசிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.
இன்று அமைச்சர்கள் பலவிதமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். நாட்டு மக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய இவர்களே தவறிழைக்கும் போது, நாடு எப்படி உருப்படப் போகின்றது?” இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.