அரச சேவைகள் ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய இரண்டு விடயங்களையும் நடைமுறைப்படுத்தவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்ட தாக பிரதி நிதி அமைச்சரும், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம நேற்றுத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 17ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட அரச சேவைகள் ஆணைக்குழு நிறுவனச் சேவையை மீள் பரிசோதனை செய்ததுடன் சில திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பை வழங்கியிருந்தன.
அரச சேவைக்கு உள்வாங்கப்பட்ட ஒருவர் மூன்று வருடங்களில் தனது தகுதிகாண் காலத்தில் வருடத்திற்கு இரண்டு தடவைகள் வீதம் ஆறு தடவைகள் வினைத் திறமைகாண் பரீட்சைக்கு தோற்ற வேண்டும். இப்பரீட்சைகளில் அவர் சித்தியடையாவிடின் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்பதே கொண்டு வரப்பட்ட திருத்தமாகும்.
நிரந்தர நியமனம் பெற்றவரும் தனது பதவி உயர்வுக்காக இவ்வாறான வினைத் திறமைகாண் பரீட்சைகளுக்கு தோற்ற வேண்டும். பரீட்சையில் சித்தியடையாதவர் பதவி ஏற்புகளை பெற மாட்டார். இந்த விடயங்களை தவறுதலாக விளங்கிக் கொண்டும் வீணான கற்பனையை வளர்த்துக் கொண்டும். சிலர் தேர்தலை சாதகமாக்கிக் கொண்டு தேர்தல் சுலோகங்களாக இவற்றை மாற்றி விட்டுள்ளனர்.
அத்துடன் தொழிற்சங்க வேலைகளில் ஈடுபடும் ஒருவர் தொழிற்சங்க வேலைகளுக்காக கடமையிலிருந்து விடுவிக்கும் காலம் ஐந்து வருடத்திற்கு மட்டுப்படுத்தப்படுவதாகவே அரச வர்த்தமானி அறிவித்தலிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையும் நடைமுறைப்படுத்துவதில்லை எனவும் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.