மன்னாரில் அண்மை காலங்களாக சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சுற்றி திரிவதாகவும் சிறுவர்களை இலக்கு வைத்து அவர்களை கடத்தும் நோக்கில் சிலர் மன்னார் மாவட்டத்திற்குள் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் (8) துரித விசாரணை முன்னெடுக்கப்பட்டதோடு காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவரை வாகனம் ஒன்றில் வந்தவர்கள் இனிப்பு பண்டங்களை வழங்கி பலவந்தமாக ஏற்றிச் செல்ல முயற்சி செய்யப்பட்டதாக குறித்த மாணவர் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக குறித்த மாணவன் கல்வி கற்கும் பாடசாலைக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் இன்றைய தினம் (8) காலை குறித்த பாடசாலைக்குச் சென்று மாணவனிடம் விசாரணைகளை மேற்கொண்டேன்.
இதன் போது மேலும் ஒரு மாணவனை இன்று திங்கட்கிழமை(8) காலை பாடசாலைக்குச் செல்லும் போது இனிப்பு பண்டங்களை வழங்கி வாகனத்தில் ஏற்ற முற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடையம் குறித்து மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதோடு,பாடசாலை பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.
மாணவர்கள் கவனம் தொடர்பாக பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள் குறித்து மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் என்னுடன் தொடர்பை ஏற்படுத்தி துரித நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.
எனவே சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள்.” என தெரிவித்தார்.
இதேவேளை, கல்முனை – உடையார் வீதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் ஒருவரும் நேற்றையதினம் காணாமல்போயுள்ள நிலையில், தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.