பெண்கள் மீதான வன்முறையை தடுப்போம் என்ற கலந்துரையாடலில் பேச பல பெண்களை துஷ்பிரயோகம் செய்த குடுமி ஜெயாவின் சகபாடி உமா சந்திரா பிரகாஷ்க்கு அழைப்பு !

பெண்கள் சந்திப்பினூடாக Zoom இணையவழிக் கலந்துரையாடல் ஒன்று “மரணங்களாலும் அவதூறுகளாலும் மறைக்கப்படும் பெண்கள் மீதான சுரண்டல்கள் உரத்துப்பேசுவோம்.” என்ற தொனிப் பொருளில் 13.05.2023 அன்று  சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இன்றைய திகதிக்கு கட்டாயமாக பேசப்பட வேண்டிய ஒரு தலைப்பாக இது காணப்படுகின்றது.  அதே நேரம் இது தொடர்பில் இருக்கக்கூடிய முரணான தன்மையையும் எடுத்துக்காட்ட வேண்டிய தேவை உள்ளது.

“பெண்கள் மீதான வன்முறையை நிகழ்த்துபவர்களை காட்டிலும் அவர்களை அனுசரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற சூழலை உருவாக்குபவர்களும் குற்றவாளிகளே”

மேற்குறித்த Zoom மூலமான கலந்துரையாடலுக்கும் – இந்த மேற்கோள் வசனத்துக்குமிடையிலான தொடர்பு பற்றி நாம் அதிகமாக சிந்திக்க வேண்டியுள்ளது. காரணம் குறித்த Zoom கலந்துரையாடலில் பெண்கள் பிரச்சினை பற்றி பேசுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான உமா சந்திரபிரகாஷ் அழைக்கப்பட்டுள்ளமையாகும்.

இலங்கையில் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புள்ள சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் வெற்றிவேலு ஜெயந்திரன் ஒரு பெரும் ஆள்மாறாட்டம் செய்துள்ளதுடன் இளம்பெண்களை ஆசைகாட்டி மோசம் செய்யும் மோசடியாளார் என்பதும் பிரான்ஸில் குற்றவாளியாகத் தண்டனை அனுபவித்துள்ளார் என்பதும் தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரியவந்திருந்தது.  ஒரு தேசியக் கட்சி, தேசிய சிறுபான்மை இனத்தின் பிரதான அமைப்பாளரை நியமிக்கின்ற போது, அந்நபர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் ஆய்வுகளும் இல்லாமல் அச்சமூகத்தில் உள்ள ஒரு அயோக்கியரை கலாச்சாரத் தலைநகர் என்று சொல்லப்படுகின்ற யாழ் மாவட்டத்தின் அமைப்பாளராக நியமித்திருப்பது யாழ் மாவட்டத் தமிழர்களை அவமானப்படுத்துகின்ற செயல் என யாழ் கல்வியியலாளர்கள் தெரிவிந்திருந்த நிலையில் இந்தப் பிரச்சனை தொடர்பிலும் – பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை தொடர்பிலும் தேசம் நெட் அதிக கவனம் செலுத்தி இருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளராக உள்ள ஜெயசந்திரன் எனும் குடுமி ஜெயா தொடர்ச்சியாக பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டவர் என்பதுடன் – சாதிய மனோநிலையில் இருந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பாக அச்சமுதாயத்தின் பெண்களை தன்னுடைய இச்சைகளுக்காக பயன்படுத்துகின்ற ஒரு அராஜகப் போக்கில் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார். பொதுவெளியில் கூட பெண்களை மிக இழிவாக தரக்குறைவாக கதைக்கக்கூடிய மனோநிலையில் உள்ள குறித்த ஜெயச்சந்திரன் என்பவரை ஆதரிக்கின்ற –  அவருடைய சக பாடிகளுள் ஒருவரே ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான  உமாசந்திரா பிரகாஷ் ஆவார்.

“ஆம், தமிழ் ஒரு பொது உடமை, உலகத்தில் முதல் முதலாக தோன்றிய மொழி தமிழ்” என்ற வாக்கியத்தோடு முகநூலில் வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளரான உமாசந்திரா பிரகாஷ் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளராகவும் உள்ளார். ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டு வந்ததில் இவருக்குள்ள பங்கை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் தான் ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டுவரவில்லை என்றும் ஆனால் ஜெயந்திரனுடைய உறவுகள் பற்றித் தனக்குத் தெரியும் என்றும் அவருடைய சினேகிதிக்குத் தெரிவித்துள்ளார். ஜெயந்திரனுடைய தனிப்பட்ட வாழ்க்கை வேறு அரசியல் வேறு அதனால் தான் அவருடன் சேர்ந்து அரசியலில் பயணிக்க தான் முன்வந்தாக இவர் தன்னுடைய சினேகிதிக்கு விளக்கமளித்துள்ளார். தன்னை பெண்ணியவாதியாகவும் காட்டிக்கொள்ளும் உமாசந்திர பிரகாஷ் ஜெயந்திரனின் தாய்வழி உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

உமாசந்திர பிரகாஷ் தற்போது பாதிக்கப்பட்டுள்ள மூன்று பெண்களின்: ஜெயந்திரனின் கொடுமை தாங்காமல் விவாகரத்துக்குக் கோரி நிற்கும் இரு பிள்ளைகளின் தாய், திருமணமாகாமலேயே குழந்தையுடன் தற்போது ஜெயந்திரனின் கீழ் அடி உதை வாங்கி வாழும் ஒரு பெண் குழந்தையின் தாய், குழந்தை முகம் கலையாத தற்போது வசீகரிக்கப்பட்ட பெண் – என அனைவரின் அவலத்தையும் நன்கு அறிந்தவர். ஆனாலும் ஜெயந்திரனின் பணத்துக்காக லக்ஸ் ஹொட்டலுக்காக இவற்றை சகித்துக்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அலுவலகம் லக்ஸ் ஹொட்டலிலியே இயங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் பெண்கள் உரிமையை பாதுகாக்க வேண்டும் – பெண்கள் மீதான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்படுகின்ற Zoom மூலமான கலந்துரையாடலில் உமாசந்திரபிரகாஷ் அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மீதான வன்முறைகளை தொடர்ச்சியாக நிகழ்த்திக் கொண்டிருக்கக் கூடிய குடுமி ஜெயா எனப்படும் ஜெயச்சந்திரன் போன்ற பல அரசியல் தலைவர்கள் என்ற போர்வையிலும் சமூகத் தலைவர்கள் என்ற போர்வையில் நம் மத்தியில் உலவி கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காட்டிலும் ஆபத்தானவர்கள் அவர்கள் செய்கின்ற வன்முறைகளை பெண்கள் மீதான அடக்குமுறைகளையும் தம் சார்ந்த கட்சி அரசியலுக்காகவும் தங்களுடைய சுயநலன்களுக்காகவும் சகித்துக் கொண்டு செல்லக்கூடிய உமாசந்திரா பிரகாஷ் போன்றவர்கள். பொதுவெளியில் தங்களை பெண்ணியவாதிகளாக காட்டிக் கொள்ளும் இவர்கள் திரை மறை பெண்கள் மீதான வன்முறைகளுக்கு ஏதோ ஒரு வகையில் துணை போகின்றார்கள் என்பதே பொருள்.

தேசம் நெட் இது தொடர்பில் பல தடவைகள் செய்திகளை பிரசுரம் செய்தும் இது பற்றிய பதில்களை ஐக்கிய மக்கள் சக்தியோ – அல்லது உமாசந்திரா பிரகாஷ் அவர்களோ பொதுவெளியில் வழங்கியிருக்கவில்லை.

இதே நேரம் குறித்த இணையவழி கலந்துரையாடலுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளரான உமாசந்திரா பிரகாஷ் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவலும் எங்களுக்கு கிடைத்துள்ளது. கட்சி சார்ந்த அழுத்தங்களும் இதன் பின்னணியில் உள்ளதாக அறிய முடிகிறது.

இந்த நிலையில் குறித்த Zoom மூலமான கலந்துரையாடலில் உமாசந்திரா பிரகாஷ் அவர்கள் கலந்து கொள்ளும் பட்சத்தில் மேற்குறிப்பிடப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் – குடுமி ஜெயா தொடர்பிலும் கேள்வி எழுப்பப்படும் என்ற அச்சம் காணப்படுவதால் உமாசந்திரா அவர்கள் மேற்குறித்த இணையவழி கலந்துரையாடலில் கலந்து கொள்ள மாட்டார் என தெரியவருகிறது.

எது எவ்வாறான போதும் ஊடகங்களும் – சமூக சிந்தனையோடு இயங்குகின்ற தன்னார்வலர்களும் இப்படிப்பட்ட பெண் அடக்குமுறைக்கு துணை போக கூடிய உமாசந்திரா பிரகாஷ் போன்றவர்களை தேர்தல் காலங்களில் மக்கள் ஓரங்கட்ட முன்வர வேண்டும். அதுவே இவர்கள் போன்ற நபர்களுக்கு ஒட்டுமொத்த சமூகமாக நாம் கொடுக்கக்கூடிய பதிலடியாக இருக்கும்.

தொழில்நுட்பமும் – மனிதனுடைய சிந்தனை திறனும் மென்மேலும் உச்சநிலையை அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள் உலகம் முழுதும் அடக்கு முறையை எதிர்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அடிப்படை பெண்கள் மீது நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகளும் பாலியல் ரீதியான கொடுமைகளும் அவர்களை மரணத்தை நோக்கி இன்னும் வேகமாக தள்ளி விடுகின்றன. இந்த நிலையில் தேசம் நெட் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் சார்ந்த செய்திகள் தொடர்பில்  தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

 

மேற்குறித்த பிரச்சனை தொடர்பில் தேசம் நெட் ஏற்கனவே பதிவு செய்திருந்த செய்தியைக் காண காண கீழே உள்ள Link ஐ Click செய்யவும்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *