தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று (13) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு ஆதரவு தெரிவித்து, ‘அனைத்து மதங்களையும் ஒன்றாக மதிக்க வேண்டும்’ என்ற தொனிப்பொருளில் இப்பேரணி தையிட்டி சந்தியிலிருந்து விகாரை வரை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 200இற்கும் மேற்பட்ட மக்கள் விகாரைக்கு ஆதரவு தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
இதன்போது யாழ்ப்பாண சிவில் சமூக நிலைய தலைவர் அருண் சித்தார்த் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் அனைவருக்கும் அனைத்து மதங்களையும் மதிக்கின்ற மத வழிபாடுகளை மேற்கொள்ளும் சுதந்திரம் உண்டு. தையிட்டி விகாரை யாழ்ப்பாண மாவட்ட வரைபடத்தில் 1959ஆம் ஆண்டு விகாரைக்குரிய பகுதி என குறிக்கப்பட்டுள்ள நிலமாகும். இது பொதுமக்களின் காணிகள் அல்ல. விகாரை அழிவடைந்த காலத்தில் பொதுமக்கள் அக்காணியை கையகப்படுத்தி தமது குடியிருப்புகளை அமைத்துள்ளனர். ஆனாலும், அது விகாரைக்குரிய நிலமாகவே காணப்படுகிறது. பொதுமக்களின் காணியில் விகாரை அமைக்கப்பட்டால், அவர்கள் நீதிமன்றத்தினை நாட முடியும்.
ஒவ்வொரு மதத்தையும் இனத்தையும் கூறி இனவாதம் மற்றும் மதவாதத்தினை எவரும் தூண்ட முயற்சிக்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.