வெடுக்குநாறி மலை வழிபாடு தொடர்பில் வவுனியா நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு  !

வவுனியா வெடுக்குநாறிமலை ஆலயத்தில் தொல்பொருளை சேதமாக்காவண்ணம் எளியமுறையில் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

மேலும், விக்கிரகங்கள் உடைப்புடன் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் காவல்துறையினருக்கு பணித்துள்ளது.

வெடுக்குநாறிமலையில் சிலைகள் உடைக்கப்பட்ட விடயம் தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கில் முறைபாட்டாளார்கள் சார்பில் முன்னிலையான அதிபர் சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில,

இந்த வழக்கில் தொல்பொருட்திணைக்களம் முதன்முறையாக முன்னிலையாகி நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறி முறைப்பாட்டாளர்கள் செயற்பட்டதாக தகவல் கொடுத்திருந்தனர்.

இன்றும் அந்த விடயத்தை கூறியிருந்தார்கள். இருப்பினும் தொல்பொருள் தொடர்பான இந்த பிரதேசத்திலே மார்ச் மாதம் இடம்பெற்ற மோசமான விக்கிரகங்கள் உடைப்பு சம்பவத்தில் தொல்பொருட் திணைக்களம் ஒரு விரலைகூட அசைக்கவில்லை.

அந்த விடயத்தை கரிசனையில் கூட எடுக்கவில்லை. அதனை மீள நிறுவும் படி நீதிமன்றம் உத்தரவை வழங்கிய பின்னரே மீள நிறுவியதால் தொல்பொருள் சேதமேற்பட்டதாக பொய்யான புகாரை தெரிவிப்பதாக நாம் எடுத்துரைத்தோம்.

அந்தவிடயத்தில் இதுவரைக்கும் சந்தேகநபராக எவரையும் குறிப்பிட வில்லை. தொல்பொருட்திணைக்களம் வனவளத்திணைக்களம் போன்றவற்றால் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யப்படுகின்ற ஒரு இடத்தில் இப்படியான விக்கிரகங்களை உடைத்தமை ஒரு விசித்திரமான விடயம் என்பதையும் கூறினோம்.

எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் காவல்துறைக்கு கட்டளை இட்டுள்ளார். அத்துடன் தொல்பொருளுக்கு சேதம் ஏற்ப்பட்டால் அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

இது நீதிமன்ற கட்டளையை மீறி செயற்பட்டமை தொடர்பாக இருப்பதால் அதற்கான நடவடிக்கைகளை உரியமுறையிலே எடுக்குமாறு தொல்பொருட்திணைக்களத்திற்கு நீதிமன்றால் அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொல்பொருள் அடையாளங்கள் சேதமாகின்ற வகையில் செயற்படாவண்ணம், சமய சடங்குகளை எளியமுறையிலே செய்வதற்குமான, எச்சரிக்கையும் முறைப்பாட்டாளர்களான எங்களுக்கு மன்றால் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இன்றைய வழக்கில் உடைக்கப்பட்ட விக்கிரகங்களுடன் ஆலயத்தின் பூசகர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *