பெற்றால்தான் தாயா?. அன்னை தெரசா என்ன குழந்தை பெற்றவரா?. அவர் உலக மக்களை தன் பிள்ளைகளாக நினைத்து பாசம் காட்டவில்லையா?. நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்காமல் பிள்ளையை வளர்த்த மேனகா காந்தி என்னைக் குறை கூறிப் பேசுவது கண்டனத்துக்குரியது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
வருண் காந்தியை வைத்து மேனா காந்திக்கும், மாயாவதிக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது. வருண் காந்தியை சிறைக்குச் சென்று பார்க்க மேனகா காந்திக்கு உ.பி. அரசு திடீரென தடை விதித்தது. இதனால் கோபமடைந்த மேனகா, மாயாவதி ஒரு குழந்தை பெற்றவராக இருந்திருந்தால் ஒரு தாயின் வலி தெரிந்திருக்கும் என்று கூறியிருந்தார்.
இதற்கு மாயாவதி தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டத்தை மீறிச் செயல்படுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். வருண் காந்தி மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை. எனது ஆட்சி, யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும். தாய்ப் பாசம் பற்றிப் பேசும் மேனகா, நமது நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான தாய்மார்களின் கவலைகள் குறித்தும் கவலைப்பட வேண்டும்.
மகனுக்கு நல்ல புத்திமதி சொல்வதை விட்டு விட்டு அவரை ஆதரித்துப் பேசும் மேனகாவின் செயல் கண்டனத்துக்குரியது. ஒரு மகனின் வலிக்காக வருத்தப்படுகிறார் மேனகா. நான் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பிள்ளைகளுக்காக கவலைப்படுகிறேன். என்னைப் பற்றி அவர் பேசிய அவமானகரமான பேச்சுக்காக என்னிடம் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் மேனகா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் மாயாவதி.