தகவல் தொடர்பு சாதனங்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த முயன்றதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இருவர் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கியூ பிரிவு போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில், இலங்கையைச் சேர்ந்த, அந்தோணி செபாஸ்டியன், இங்கிலாந்து குடியுரிமை பெற்ற இலங்கை தமிழர் மகேந்திரன் ஜெகநாதன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த குகன், கடலூரைச் சேர்ந்த ஜெயமோகன் ஆகியோரை போலீஸார் பிடித்தனர். அவர்களிடமிருந்து லேப்டாப் கம்ப்யூட்டர், சாட்டிலைட் போன் உள்ளிட்ட சில பொருட்கள் சிக்கின.
விசாரணையில் ஜெகநாதனும், செபாஸ்டியனும் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், புலிகள் இயக்கத்திற்குத் தேவையான ஆயுதங்களை வாங்க அவர்கள் சென்னையில் கூடியதும் தெரியவந்தது.
சில நாட்களுக்கு முன்புதான் லண்டனிலிருந்து திரும்பியிருந்தார் ஜெகநாதன். இவர்கள் இருவருக்கும் ஜெயமோகன் மற்றும் குகன் ஆகியோர் உதவி செய்துள்ளனர். குகனை ராமநாதபுரத்திலும், ஜெயமோகனை கடலூரிலும் வைத்து போலீஸார் கைது செய்தனர். ஜெயமோகன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.