முதலீட்டுச் சபையின் கீழ் முன்னோடித் திட்டமாக கஞ்சா பயிர்செய்கையை மேற்கொள்ள நிபுணர்களின் அனுமதி பெறப்பட்டதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதலீடுகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (26) பிற்பகல் அரச முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சில் இடம்பெற்றது.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“முதலீட்டு சபை கஞ்சா பயிர்செய்கையை ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்குகிறது. அதற்கான முதலீட்டாளர்களை தேடி வருகிறோம். சமீபத்தில் வெளியான நிபுணர் குழு அறிக்கையில் முதலீட்டு சபையின் கீழ் முன்னோடி திட்டம் ஆரம்பிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில் சோதனையை தொடங்குவோம். அதற்கு நாம் ஒரு பகுதியை தேர்வு செய்ய வேண்டும். பெரும்பாலும் அது ஒரு வலயமாக இருக்ககூடும். அதிக அன்னியச் செலாவணியைக் கொண்டுவரும் சில முதலீட்டாளர்களுடன் இதைத் தொடங்க உத்தேசித்துள்ளோம். அவர்கள் கஞ்சாவை வளர்ப்பது மட்டுமல்லாமல், குறைந்தபட்ச தயாரிப்புகளையும் செயலாக்க வேண்டும். அதுதான் நாட்டின் வருமானம். அதை செயற்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ஏனெனில் சட்டம் இயற்றப்பட்டவுடன், சர்ச்சைகள் இருக்கக்கூடாது. குழு அறிக்கையின்படி, அதை எப்படி செயற்படுத்துவது என்பது குறித்து எமக்கு அமைச்சரவை பத்திரம் தேவை.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.