தமிழ்நாடு பணியாற்றும் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பெண் குழந்தைகளிடம் இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் நேற்று சிதம்பரத்தில் விசாரணை மேற் கொண்டார்.
சிதம்பரம் நடராஜர் கோயில்தீட்சிதர்கள் குழந்தை திருமணங் கள் செய்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணையில் அச்சிறுமிகளிடம் கன்னித் தன்மைபரிசோதனைக்காக, தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் கடந்த 9-ம் திகதி கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் லட்சுமி வீரராகவன் மற்றும் உறுப்பினர்கள் இளங்கோவன், பெனிட்டா, முகுந்தன், செந்தில் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தி, இதுதொடர்பான விசாரணை அறிக்கையை தங்களது தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நேற்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் சிதம்பரத்திற்கு வருகை தந்தார்.
நடராஜர் கோயிலுக்கு சென்று ஆதிமூலநாதர் சந்நிதி அருகே அறுபத்து மூவர் சந்தியில் பாதிக்கப்பட்ட தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ம.ராஜசேகரன் மற்றும் இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர், பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமிகளின் வீடுகளுக்கு சென்று சிறுமிகளிடமும், அவர்களது பெற்றோரி டமும் தனியாக விசாரணை மேற்கொண்டு பதிவு செய்தார். அப்போது சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கறிஞர் ஜி.சந்திர சேகரன் உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த், “இச்சம்பவத்தில் தானாக முன் வந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்துகிறது. இதுதொடர்பாக தமிழக காவல் துறை தலைவரிடம் விளக்கம் பெறப்பட்டது. தமிழக தலைமை செயலரிடமிருந்தும் அறிக்கை பெறப்பட்டது. அந்த அறிக்கை சரியா என்பதை விசாரித்தோம்.
முதலில் பாதிக்கப்பட்ட தீட்சிதர்கள், இரண்டாவதாக காவல் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், மூன்றாவதாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் என மூன்று கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவிரல் பரிசோதனை நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை.
விசாரணை அறிக்கையை ஆணைய தலைவரிடம் விரைவில் அளிக்க உள்ளேன். அந்த அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். தானாக முன்வந்து குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்துகிறது.
இவ்வாறு குழந்தை திருமணம் நடைபெறவில்லை என சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கூறியிருந்த நிலையில், திருமண படங்கள் வெளியாகி இன்றைய தினம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி மூலம் – இந்து தமிழ், டேய்லி தந்தி