வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு, சுந்தரபுரம் பகுதியில் 125 ஏக்கர் வனப்பகுதி தனிநபர்களால் பூரணமாக அழிக்கப்பட்டுள்ளது.
குறித்த காட்டுப்பகுதி முற்றாக அழிக்கப்பட்டு துப்பரவு பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் வனவள அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த கிராமத்தில் காணி அற்ற நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற நிலையில் உழுந்து விதைத்தாலே வனவள அதிகாரிகள் தம்மை கைது செய்வதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறான நிலையில் காடுகள் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு வனவள அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமை தமக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தவதாக மக்கள் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரிடம் மக்கள் தெரியப்படுத்தியதை அடுத்து, இந்த சம்பவத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் அண்மையில் வவுனியாவின் கட்டையர் குளம் பகுதியில் 12 ஏக்கர் காடு சட்டவிரோதமாக அழிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை தடுக்க முற்பட்ட அப்பகுதி ஆசிரியர் ஒருவர் மீது காடழிப்புக்கு துணைபோன கிராமசேவகர் போலியான பிரச்சாரங்களை சமூகவலைத்தளங்களில் பரப்பியிருந்தார். அதே நேரம் குறித்த காடழிப்பிற்கு பின்னணியில் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு. திலீபன் அவர்களுடன் நெருக்கமானவர்களுக்குதொடர்பு இருப்பதாகவும் – இதனாலேயே பா.உ திலீபன் இந்த விடயத்தில் பொறுமை காப்பதாகவும் வவுனியாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறான போதும் காடுகள் அழிக்கப்படுவது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பலரும் வேண்டுகோள் விடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.