மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடக்க முடியாதவர்களுக்காக நடமாடும் வாக்குப்பதிவு நிலையங்களை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்து தேவையான தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வீடுகளை விட்டு வெளியேற முடியாதவர்களுக்கு விசேட வாக்களிப்பு நிலையங்களை நிறுவுவதன் மூலம் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் வாக்களிப்பதைக் கண்காணிக்க முடியும், அதே நேரத்தில் வாக்காளர் செல்வாக்கு இல்லாமல் வாக்களிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
அத்தியாவசிய சேவை ஊழியர்கள், சுதந்திர வர்த்தக வலயங்களுக்குள் பணிபுரிபவர்கள் மற்றும் விசேட வசதிகள் தேவைப்படுபவர்களுக்கும் வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட வேண்டும் எனவும் நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.
முன்கூட்டியே வாக்களிக்க விண்ணப்பிப்பதற்கான பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் நாளுக்கு முன்னதாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான முன்மொழிவு சட்ட வரைவு ஆசிரியருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அத்தகைய விதிமுறைகள் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என நம்புவதாகவும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.