தேசிய உணவுப் பாதுகாப்பு ஆய்வின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட பல பழ மாதிரிகள் மற்றும் கருவாடுகளில் ஈயம் உள்ளிட்ட கன உலோகங்கள் கலந்திருப்பது தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் நெத்தலி மற்றும் கருவாட்டு வகைகள் மற்றும் பழங்களில் ஈயம் மற்றும் ஆர்சனிக் போன்ற கன உலோகங்களுக்கான சோதனையை இலங்கை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களிலும் கல உலோகங்களுக்கான பரிசோதனையை ஏற்றுமதி செய்யும் நாட்டிலிருந்து அங்கீகாரம் பெற்ற மற்றும் சுதந்திரமான ஆய்வகத்திலிருந்து அறிக்கையைப் பெறுமாறு அனைத்து பழ இறக்குமதியாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பண்டங்களில் அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவைவிட அதிகமாக இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சில இறக்குமதி செய்யப்பட்ட பழங்களில் ஆபத்தான அளவு ஈயம் உள்ளது என்றும் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த கன உலோகம் என்றும் தெரியவந்ததை அடுத்து, இறக்குமதி செய்யப்படும் கருவாடுகள் மற்றும் பழங்களில் ஈயம் மற்றும் ஆர்சனிக் உள்ளிட்ட கன உலோகங்கள் உள்ளதா என்று சோதிக்கப்படுவதை கட்டாயமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.