வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்தில் புளட் உறுப்பினருக்கு மரண தண்டனை!

வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட எதிரிக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

மேல்நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்றையதினம் தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் உயிரிழந்தவரின் உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட துப்பாக்கித்தோட்டாக்கள் எதிரியினால் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மன்று திருப்தியடைந்தது.

அதற்கமைவாக எதிரி குற்றவாளியாக இனங்காணப்படுவதாக மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்து அவருக்கு மரணதண்டனை உத்தரவினை வழங்கினார்.

வவுனியாவை சேர்ந்த நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த நபர் தமிழ்மக்கள் விடுதலை கழகத்தின்(புளட்) வவுனியா வேப்பங்குளம் முகாமுக்கு பொறுப்பாக செயற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் 14 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இன்றையதினம் தீர்ப்பின் பின்னர் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *