நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நல்லிணக்கத்திற்கான செயற்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இங்கு சட்ட வரைவு, நிறுவன நடவடிக்கைகள், காணிப் பிரச்சினைகள், கைதிகளை விடுதலை செய்தல், அதிகாரப் பரவலாக்கம் ஆகிய 05 பிரதான பகுதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல், தேசிய காணி சபையொன்றை நிறுவுதல் மற்றும் தேசிய காணி கொள்கையை உருவாக்குதல், காணாமற் போனோர் தொடர்பான அலுவலகத்தை மிகவும் திறம்பட செயற்படுத்துதல், அதன் டிஜிட்டல் மயமாக்கல் செற்பாடுகளை நிறைவு செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு, இதுவரை தகவல் சேகரிக்க முடியாத காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டது.
மேலும், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் என்பவற்றை ஸ்தாபித்தல் மற்றும் அது தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.
எதிர்வரும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் அவற்றைப் பூர்த்தி செய்து, அது தொடர்பான அறிக்கையை வழங்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.
இக்கலந்துரையாடலில், காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைமை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், அரச துறையினரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை விடுவித்தல் மற்றும் மகாவலி காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
கைதிகளின் விடுதலை மற்றும் பொதுமன்னிப்பு தொடர்பாக நீதி அமைச்சின் ஊடாக விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
அதிகாரப் பரவலாக்கம், மாகாண மட்டத்தில் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மாகாண ஒம்புட்ஸ்மன் நியமனம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் உள்ளி;ட்டவர்கள் இந்தக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.