இன நல்லிணக்கம் தொடர்பில் ஒருபுறம் கதைத்து விட்டு, பிறிதொரு புறம் தமிழ்ப் பிரதிநிதிக்கு எதிராகச் செயற்படும் போது தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (08) இடம்பெற்ற நிதி, பொருளாதார உறுதிப்படுத்துகை மற்றும் தேசிய கொள்கைகள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்ட கேள்வியை அவர் எழுப்பினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்ட விதம் முற்றிலும் தவறானது.
இதன் மூலம் தமிழ் மக்களுக்கு வழங்கும் செய்தி என்ன? இன நல்லிணக்கம் தொடர்பில் ஒருபுறம் கதைத்து விட்டு, பிறிதொரு புறம் தமிழ் பிரதிநிதிக்கு எதிராக செயற்படும் போது, தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்வார்கள்?
குற்றமிழைப்பவர்களை சமமாக நடத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் இந்த வித்தியாசத்தை அவதானித்தோம். ஆளும் தரப்புக்கு ஒரு சலுகையும் எதிர்க்கட்சிக்கு பிறிதொரு சலுகையும் என அரசாங்கம் மனம்போன போக்கில் செயற்படுகிறது” என்றார்.