இலங்கை இராணுவத்திடம் மனித நேயம் இல்லாவிட்டால் வன்னியில் எஞ்சியுள்ள பகுதி துவம்சமாக்கப்பட்டிருக்கும் – அமைச்சர் டலஸ்

dalas_alahapperuma.jpgமனித நேயம் மிக்க இலங்கை இராணுவத்திடம் மனித நேயம் குறித்து சர்வதேச இராணுவங்கள் பாடம் கற்க வேண்டும். அந்தளவுக்கு யுத்தத்தின் போது இலங்கை இராணுவம் மனித நேயம் பேணுகின்றது. இந்த மனிதநேயத்தின் காரணமாகவே வடக்கில் எஞ்சியுள்ள கிலோமீற்றர் பிரதேசத்தை இராணுவம் தாக்கி துவம்சம் செய்யாமல் பொறுமையாக செயல்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலகப் பெரும தெரிவித்தார்.

பலாங்கொடை டிப்போவை 37 ஆவது மாதிரி டிப்போவாக தரமுயர்த்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்து கூறியதாவது,

கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒசாமா பின் லேடன் சிக்கியிருந்தால் மேற்கு நாடுகளின் இராணுவங்கள் கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்குமா? இலங்கை இராணுவம் தமிழ்ப் பொது மக்களைப் பாதுகாப்பதற்காக மிகவும் மனித நேயத்துடன் பண்புடன் செயல்படுகிறது.  எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க உட்பட சர்வதேச உலகமும் புலிகளைத் தோற்கடிக்க முடியாது எனக் கூறி அவர்களுக்கு தாயகத்தின் ஒரு பகுதியை தாரை வார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கையில் நாட்டின் ஜனாதிபதியாக வந்த மகிந்த ராஜபக்ஷ இந்த யுத்தத்தை எமது இராணுவத்தால் வெற்றி கொள்ள முடியுமென திடசங்கற்பம் பூண்டு முப்படைகளையும் வழிநடத்தி இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை எமக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

பயங்கரவாதிகளான அல்ஹைடா அமைப்பிடம் கூட விமானங்கள், நீர்மூழ்கிகள், பயங்கர ஆயுதங்கள் இருக்கவில்லை. ஆனால் யாருமே நினைத்தும் கூட பார்க்க முடியாத அளவில் ஆயுத மயப்பட்ட புலிகளை எமது இராணுவம் வெற்றி கொண்டமை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். நாம் எந்தளவு வெற்றிகளை அடைந்தாலும் அவை சிங்களவர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. சகல இன மக்களும் இந்த மண்ணில் நிம்மதியாக வாழ வேண்டும். சிறுபான்மை சமூகங்களை அடக்கிய உலகில் எந்த நாடும் முன்னேறியதில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *