கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தேசிய சமாதானப் பேரவை விசனம் !

“யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தேசிய சமாதானப் பேரவை விசனம் வெளியிட்டுள்ளது.

நாட்டில் தனிமனிதர்களும் சமூகங்களும் அசமத்துவமான முறையில் நடத்தப்படுகிறார்கள் என்ற உணர்வை வலுப்படுத்தும் இன்னொரு சம்பவமாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது அமைந்திருக்கிறது. பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்வதற்கு இடையூறு விழைவித்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

பொது மைதானம் ஒன்றில் பொன்னம்பலம் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய கூட்டத்துக்கு முன்கூட்டியே அறிவிக்காமல் சிவில் உடையில் வந்த இருவர் தங்களை அடையாளப்படுத்த மறுத்ததையடுத்து அவர்களுக்கும் பொன்னம்பலத்துக்கும் இடையில் வாக்குவாதம் மூண்டது. இந்த சம்பவம் தாங்கள் வேறுபட்ட முறையில் தாங்கள் நடத்தப்படுவதாக தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள உணர்வை மீளக்  கிளறியிருக்கிறது.

நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் அரசியல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவது வழமையான ஒரு நடைமுறை. தங்களை அவமதிப்பதாகவும் அச்சுறுத்துவதாகவும் அந்த நடைமுறை இருப்பதாக அந்த மக்கள் கருதுகிறார்கள்.

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 14 வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட துப்பாக்கிகளுடனும் கமராக்களுடனும் சீருடையில் படையினர் பெருமளவில் பிரசன்னமாக இருப்பது அந்த மக்கள் மத்தியில் ஒரு அநாதரவான உணர்வை ஏற்படுத்துகிறது.  தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் அக்கறையாக இருந்தால்  அவர்களின் மனங்களை வென்றெடுக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தும் அறிகுறியாக இந்த நிலைமை இருக்கிறது.

நாட்டின் ஏனைய பாகங்களில் வாழும் மக்களை விடவும் வேறுபட்ட முறையில் வடக்கு,கிழக்கு மக்களை நடத்தவேண்டாம் என்று தேசிய சமாதானப் பேரவை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது. அந்த மக்களும் ஏனைய மக்களைப் போன்று சமத்துவமான உரிமைகளுக்கு உரித்துடையவர்களே.

பாராளுமன்றத்தில் உள்ள ஏனைய சமூகங்களின் பிரதிநிதிகள் தவறாக நடந்துகொள்கின்ற போதிலும்  மரியாதையாக நடத்தப்படும் அதேவேளை சிறுபான்மை இனத்தவர்களான தமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைவர் கைதுசெய்யப்படுவது  இலங்கையின் அரசியல் கட்டமைப்புக்கு நீண்டகாலமாக பெரும் பாதிப்பாக அமைந்த இனத்துவ பரிமாணத்தை மீண்டும் வெளிக்காட்டி நிற்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலத்தின் கைது பாரபட்சமான முறையில் பிரயோகிக்கப்படுகிறது என்பதன் வெளிப்பாடாகும். இது ஒரு நாடு ஒரு சட்டமா அல்லது ஒரு நாடு இரு சட்டங்களா என்ற கேள்வியைக் கிளப்புகிறது.

உலகின் முதன்மையான மனித உரிமைகள் சாதனமான குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை ( International Covenant  on Civil and Political Rights — ICCPR) நடைமுறைப்படுத்துவதற்கென்று கொண்டவரப்பட்ட சட்டத்தை அரசாங்கம் தவறாக பயன்படுத்திவருகின்ற போக்கில் இந்த தோற்றப்பாட்டை காணக்கூடியதாக இருக்கிறது.

அதாவது பெரும்பான்மை இனத்தவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக இந்த சட்டம் பயன்படுத்தப்படுகின்ற அளவுக்கு சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகளை புண்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக பயன்படுத்தப்படுவதில்லை.

சமூக வாழ்வின் சகல அம்சங்களிலும் பாரபட்சம் காட்டப்படாமல்  சகலரும் சமத்துவமான முறையில் நடத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு அரசியலமைப்புக்கான 21 வது திருத்தத்துக்கு இசைவான முறையில் சமத்துவம் மற்றும் பன்மைத்துவ ஆணைக்குழு (Equality and Pluralism Commission) ஒன்றை நிறுவுமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம்.

நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கும் மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்துமாறும் அரசியலமைப்பின் பிரகாரம் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பரவலாக்கப்படக்கூடியதாக அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் இன,மத அடிப்படையில் அரச அதிகாரிகள் அடாத்தான முறையில் நடந்துகொள்ளும் சாத்தியத்தைக் குறைப்பதற்கு சகல சமூகங்களையும் அரவணைக்கும் அணுகுமுறையுடன் சேவைகளை வழங்குவதற்கும் பன்மைத்துவ பண்புகளை விளங்கிக்கொள்வதற்கும் பொலிசார் உட்பட அரசாங்க அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குமாறும் அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம்.

அத்தகைய நிறுவனரீதியான ஒரு ஏற்பாட்டின் மூலம் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என்பதுடன் வெளியுலகில் எமது நாட்டின் விழுமியங்களை பிரதிபலிக்கக்கூடியதாகவும் இருக்கும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *