பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளியோம் – ஜனாதிபதி

mahinda.jpgநாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டை முழுமையாக மீட்டு அதனை முழுமையாகப் பாதுகாக்கும் பொறுப்பு எமக்குண்டு. இலங்கையை துண்டாடப்பட்ட நாடாக எமது அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் இந்நாட்டில் வாழும் சகல இனங்களுக்கும் தாய் நாடாகும். இந்நாட்டின் மீதான உரிமை சகலருக்கும் உள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி, பல ஆண்டுகளுக்குப் பின் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சுதந்திர இலங்கையில் சகல மக்களும் ஐக்கியமாக தமிழ், சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

‘ரன்பிம’ காணி உறுதி வழங்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் காணி உறுதிப்பத்திரங்களைக் கையளித்து உரை நிகழ்த்திய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

புலிகள் இன்று யுத்த பாதுகாப்புப் பகுதிக்குள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையொன்றிலேயே காணி உறுதி வழங்கும் இந்நிகழ்வு இடம்பெறுகிறது. நாட்டை நேசிக்கும் அரசாங்கங்கள் போலவே நாட்டை நேசிக்காத அரசாங்கங்களும் இந்த நாட்டை ஆண்டுள்ளன. இதனால் காணிப் பிரச்சினைகளில் நாம் எதிர்பார்த்த இலக்கை அடைந்து விட்டோமா என்பது சந்தேகமே. மக்கள் தமது சொந்தக் காணிகளுக்கு உறுதியைப் பெற முடியாத நிலையும் காணிகளுக்கான நட்டஈட்டைக் கூட பெறமுடியாத நிலையே கடந்த காலங்களில் இருந்துள்ளன. நிறுவனங்களுக்கு அரச காணியை விற்றவர்கள், குறிப்பாக சில நிறுவனங்களுக்கு 20,000 ஹெக்டயர் காணிகளை வழங்கியவர்களும் உள்ளனர். தற்போது அமைச்சர் டியூ குணசேகரவின் தலைமையில் அமைச்சரவை உப குழு அமைத்து ஆராயப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.

மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் காணித் துண்டுகளைப் பகிர்ந்தளிப்பதென உறுதியளித்த போதும் தற்போது ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட காணிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட வேண்டும். இந்நாட்டு மக்களுக்கு அவர்களுக்கான காணி உறுதியை வழங்குவதுடன் நாட்டை முழுமையாகப் பாதுகாக்கவும் எமக்கு பொறுப்பு உள்ளது. இன்று தாய் நாட்டைப் பாதுகாக்க தம்முயிரைப் பணயம் வைத்துச் செயற்படும் படையினரில் பெரும்பாலானோருக்கு ஒரு அங்குலம் காணி கூட சொந்தமாக இல்லாதுள்ளது. படையினர் தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த வகையில் இந்நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் படையினருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்.

துண்டாடப்பட்ட நாட்டை நாம் இன்று மீட்டுள்ளோம். மீண்டும் இந்த நாடு துண்டாட இடமளிக்க முடியாது. கடந்த காலங்களில் இந்த நாடு துண்டாடப்பட்டு உடன்படிக்கை செய்து கொடுக்கப்பட்டது. அதனை வைத்துக்கொண்டே புலிகள் தம்மைப் பலப்படுத்திக் கொண்டார்கள். சர்வதேசத்திற்குச் சென்று தமது பலத்தைக் காட்டி தனிநாடு கோரவும் புலிகளுக்கு அது உறுதுணையானது. உலகைப் பொறுத்தவரை முப்படைகளையும் விமானங்களையும் பாரிய ஆயுதங்கள் பெருந்தொகையைக் கொண்ட அமைப்பென புலிகளையே கூற முடியும்.

அண்மைக் காலங்களில் நாம் தொலைக்காட்சியைப் பார்த்தால் புலிகள் வைத்திருந்த ஆயுதங்கள் பற்றி அறியலாம். இது வடக்கு, கிழக்கை பாதுகாக்கவென வைத்திருந்த ஆயுதமல்ல. நீர்கொழும்பிலிருந்து பதுளை வரை நாட்டைத் துண்டாடும் நோக்கம் கொண்டவை என்பதை சகலரும் உணர வேண்டும்.

தற்போது நடப்பது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமல்ல. புலிகளிடம் அகப்பட்டுள்ள தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமான யுத்தம் இது. மக்களையும் நிலங்களையும் மீட்பதே இதன் நோக்கம். நாம் மேற்கொண்ட திட்டமிட்ட செயற்பாடுகளே பயங்கரவாத யுத்தத்தையும் பொருளாதார யுத்தத்தையும் எதிர்கொள்ள வழி சமைத்துள்ளது. யுத்தத்தை காரணம் காட்டி எத்தகைய அபிவிருத்தியையோ மக்களுக்கான நிவாரணங்களையோ அரசாங்கம் நிறுத்தவில்லை.நாட்டையோ அரச வளங்களையோ விற்று அல்லது ஈடு வைத்து நாம் ஆட்சி நடத்தவில்லை. ரணில் விக்கிரமசிங்க தமது ஆட்சிக் காலத்தில் நாட்டை ஈடு வைத்தே கடன் பெற்றார்.

நாம் எமது நாட்டின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே சர்வதேசத்தில் கடன் பெறவுள்ளோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *