மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை (17) காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த கொலைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
தாக்குதல் சம்பவத்தின் போது உயிரிழந்த 25 வயதுடைய இளம் குடும்பஸ்தர் உடைய 23 வயதுடைய சகோதரர் அச்சங்குளம் கிராமத்தில் யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் சனிக்கிழமை காலை குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற 23 வயதுடைய குறித்த இளைஞனை யுவதியின் உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதன் போது காயமடைந்த குறித்த இளைஞர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சகோதரர் தாக்கப்பட்ட விடயம் குறித்து அறிந்த கொண்ட 25 வயதுடைய இளம் குடும்பஸ்தரான இளைஞன் யுவதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதன் போது யுவதியின் உறவினர்களுக்கும்,தாக்குதலுக்குள்ளான இளைஞனின் சகோதரனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கை கலப்பாக மாறியது.
இதன் போது இளம் குடும்பஸ்தரான குறித்த சகோதரர் மீது கூரிய ஆயுதத்தினால் தலையில் தாக்கியுள்ளனர். படு காயமடைந்த இளம் குடும்பஸ்தர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மரணித்தவர் அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தை என தெரிய வருகிறது.
உயிரிழந்தவரின் சடலம் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.