பிரித்தானியா இன்று நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ள வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியா நடைமுறைப்படுத்தியுள்ள வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தில் 65 நாடுகள் உள்ளடங்குவதாக ஸ்ரீலங்காவிலுள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் நாடுகளுக்கு கட்டணக் குறைப்பு மற்றும் எளிமையான வர்த்தக விதிமுறைகள் போன்ற சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தக ஏற்றுமதி சந்தையாக பிரித்தானியா இருப்பதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்த உறவை மேலும் வலுப்படுத்த பிரித்தானியா ஆர்வம் காட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், கட்டணக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள பொருட்களை இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்வார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை உள்ளிட்ட நாடுகளின் சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக பிரித்தானியா அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் சாரா ஹல்டன் மேலும் கூறியுள்ளார்.